மாநாடு படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சிம்பு தற்பொழுது கௌதம் வாசுதேவ் மேனனுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை தொடர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். தற்போது உருவாக உள்ள இந்த புதிய படத்தின் பெயர் “நதிகளிலே நீராடும் சூரியன்” என வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் அப்டேட்டை தெரிவித்துள்ளது படக்குழு. இது குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சிம்பு, எல்லா வல்ல இறைவனின் ஆசியின்படி, கௌதம் மேனன் இயக்கும், ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் #STR47 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை மதியம் 12.15க்கு வெளியாகும். என தெரிவித்துள்ளார். தீப்பற்றி எரியும் தீக்குச்சி புகைப்படத்துடன் கூடிய ஒரு போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். சிம்புவின் பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது தவிர கன்னடத்தில் வெளியான ஹிட் படமான மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு . ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், படத்தை விரைந்து முடிக்க இயக்குநர் கிருஷ்ணா வேலைகளை முடுக்கிவிட்டுள்ளாராம்.
கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’ என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் வட சென்னை இளைஞராக சிம்பு வலம் வருவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா, ரௌத்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்தான் ‘கொரோனா குமார்’ படத்தின் இயக்குநர் கோகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘ சுமார் மூஞ்சு குமார்’ என்ற விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. இதனை அடிப்படையாக கொண்டுதான் ‘கொரோனா குமார்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிப்பது மட்டுமின்றி, யுவன் உருவாக்கியுள்ள ஆல்பம் சாங் ஒன்றில் ,சிம்பு பாடல் பாடியுள்ளார். இந்த ஆல்பம் பாடலில் , காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பாடலில் இடம்பெறும் நடன காட்சிகளை பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். தற்போது எடிட்டிங் பணியில் உள்ள பாடல் விரைவில் யுவனின் யுடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிம்பு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் களமிறங்கியிருந்தார். அதன்பிறகு சிறு சலசலப்பு ஏற்படவே , மீண்டும் உடல் எடை குறைத்து முழு மூச்சில் நடிப்பில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது