Ilaiyaraaja Copy Rights Issue: இசைக்கான காப்புரிமை விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், சட்டம் சொல்வது என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா காப்புரிமை முறையீடு:
இசை எனும் வார்த்தை பூவுலகில் இருக்கும் வரை, இசைஞானி இளையாராஜா என்றொரு பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அந்த அளவிற்கு தனது தேனிசை மூலம், தலைமுறைகளை கடந்த ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். காலத்தை கடந்தும் கொண்டாடும் வகையிலான அவரது பாடல்கள் தான், துவண்டு கிடக்கும் வேளைகளில் நமக்கான உற்சாக டானிக்காவும் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக இளையராஜாவின் காப்புரிமை விவகாரம் என்பது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. தனது பாடல்களை பயன்படுத்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் அனுப்புவதன் மூலமும் இளையராஜா அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறார். இதனால் நெட்டிசன்கள் இரு தரப்பாக பிரிந்து, தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:
சிலர் நியாயமான கருத்துகளை கூறினாலும், பலர் இளையராஜாவை தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். குறிப்பாக, ”ஹலோ இளையராஜா ஆஃபீஸா? எங்க ஏரியாலா கோயில் திருவிழாவுல ரேடியோ செட்டுக்கார அண்ணே வெறும் இளையராஜா பாட்டா போடுறாரு சார், காதுகுத்து விழாவுலா இளையராஜா பாட்டா? இருடா இளையராஜா சார்ட போட்டு கொடுக்கிறேன், பாத்ரூம்ல அவர் பாட்ட பாடக்கூட பயமா இருக்கு” என்பது போன்ற மீம்ஸ்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. இதுபோக, இளையராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை கூட அலசி ஆராய்வதாக, பல மோசமான ரைட்-அப்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாடல்களுக்கான காப்புரிமை சொல்வது என்ன?
ஒரு படத்திற்கான இசையமைப்பாளரை, தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து ஒப்பந்தம் செய்கிறார். அதன்படி இசையமைப்பாளர் வழங்கும் பாடல் மற்றும் பின்னணி இசையை, ஒரு குறிப்பிட்ட படத்தில் தனக்குத் தேவையான இடத்தில் பயன்படுத்த மட்டுமே தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு. அதை ஒரு நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் விற்றாலும், அந்தப் படத்தின் பெயரில் மட்டுமே லாபங்களை அனுபவிக்க முடியும். அதைத்தாண்டி மற்ற படங்களிலோ, அதனை ரீமிக்ஸ் செய்து வேறிடங்களிலோ பயன்படுத்த உரிமை கிடையாது. சர்வதேச காப்புரிமை சட்டமும் இதைத்தான் சொல்கிறது.
ஏமாற்றப்பட்ட இளையராஜா..!
தற்போதைய சூழலில் இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் எத்தனை முறை தங்கள் பாடல் வர வேண்டும், எந்த இடத்தில் வரவேண்டும், எத்தனை ஆண்டுக்காலம் அதனைப் பயன்படுத்தலாம் என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாகப் போட்டுக் கொள்கிறார்கள். ஒப்பந்தப்படி கணிசமான ராயல்டியையும் கட்டாயம் வசூலித்து வருகின்றனர். ஆனால் இளையராஜா இப்படியான ஒரு டிஜிட்டல் வளர்ச்சியை அந்தக் காலத்தில் எதிர்பார்க்காத காரணத்தால், அவர் சில இடங்களில் ஏமாற்றப்பட்டுள்ளார். ஒரு சில நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு அவர் கொடுத்த உரிமையை, காலம் முழுவதற்குமான உரிமையாக எடுத்துக் கொண்டுள்ளார்கள். இது காப்புரிமை நியதிக்கு எதிரானது. அதன்படி, தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றன. உதாரணமாக, உரிய அனுமதியின்றி யாரேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சொந்தமான இசையை வணிக நோக்கில் பயன்படுத்திவிட்டால், உடனடியாக அவருக்கு அதிகபட்சமாக லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது.
பணத்தை குவிக்கும் இளம் இசையமைப்பாளர்கள்:
இன்றைய தேதிக்கு சொற்ப படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களே, ராயல்டி மற்றும் காப்புரிமை மூலம் ஒவ்வொரு மாதமும் கணிசமான வருவாயை ஈட்டி வருகின்றனர். சுமார் 4500 பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் சம்பாத்தியத்தை விட, சில நூறு பாடல்களைப் படைத்த இசையமைப்பாளர் அதிகம் சம்பாதிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நீதிமன்றத்துக்கு செல்லாமலே அவர்களுக்கு இந்த வருவாய் கிடைக்கிறது. அப்படி தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகையை கேட்பதை குறிப்பிட்டு தான், பெருந்தன்மை இல்லையா? பேராசையா ? என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் இளையராஜாவை வசைபாடுகிறார்கள்.
இளையராஜாவிற்கு பேராசையா?
இளையராஜா தன் உரிமைக்காக மட்டும் தான் வழக்கு நடத்துகிறாரா? என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. தனிநபர் திறமையையும், உழைப்பையும் சுரண்டும் ஒட்டுமொத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவே அவர் போராடி வருகிறார். ஒருவேளை தான் இந்த சட்டப் போராட்டத்தில் வென்றால், அதன்மூலம் அவருக்கு புதிய வருமானம் வந்தாலும் அதைத் திரையிசைக் கலைஞர்களின் சங்கத்துக்கே முழுமையாக செல்லும்படி எழுதித் தந்துள்ளார். அவரின் வாரிசுகளுக்குக் கூட தரவில்லை. ஆனால், இதை கூட அறியாத சில அதிமேதாவிகள், இளையாராஜாவை மிகவும் சிறுமைப்படுத்தி எழுதுகின்றனர்.
காப்புரிமைச் சட்டத்தின் பலன்கள் பற்றியும், இளையராஜாவின் போராட்டத்திற்கான உண்மையான நோக்கமும் அறியாமல் பலரும் இளையராஜாவை இணையதளங்களில் கடுமையாக விமர்சித்தாலும் இரவின் தனிமையிலும், சிலரின் நினைவிலும், சில மோசமான தருணங்களிலும் நம்மை நாமே தேற்றிக் கொள்ள தேடிச் செல்லும் இடமாக இளையராஜாவின் இசையே உள்ளது. கொண்டாட்டத்தை தர எத்தனை இசையமைப்பாளர்களின் இசைகள் இருந்தாலும், நம்மை நாமே தேற்றிக் கொள்ள நமக்கு ஆறுதல் சொல்ல இளையராஜாவின் இசை மட்டுமே நமக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.