RBI Gold: 100 டன் எடையிலான தங்கம் ஒரே அடியாக இந்திய பெட்டகங்களுக்கு கொண்டு வரப்படுவது, 1991ம் ஆண்டிற்கு பின் இதுவே முதல்முறையாகும்.


இந்தியா வந்த 100 டன் எடையிலான தங்கம்:


இந்திய ரிசர்வ் வங்கி இங்கிலாந்தில் இருந்து 100 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை உள்நாட்டிலுள்ள பெட்டகங்களுக்கு மாற்றியுள்ளது. 1991 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, உள்நாட்டில் உள்ள பெட்டகங்களுக்கு இந்த அளவிலான தங்கத்தை இந்த அளவிற்கு கொண்டு வருவது இதுவே முதல்முறையாகும்.


இதே அளவிலான தங்கம் வரும் மாதங்களில் மீண்டும் நாட்டிற்கு வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தளவாடக் காரணங்களுக்காகவும்,  பன்முகப்படுத்தப்பட்ட சேமிப்பிற்காகவும் நாட்டிற்குள் இருக்கும் பெட்டகங்களுக்கு தங்கம் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.


ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் தங்கம்:


அண்மைக்கால தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில் ரிசர்வ் வங்கியிடம் 822.1 டன் தங்கம் இருந்தது. அதில் 413.8 டன்கள் வெளிநாடுகளில் உள்ளன. கடந்த நிதியாண்டில் வாங்கிய 27.5 டன்கள் சேர்த்து, சமீபத்திய ஆண்டுகளில் தங்கத்தை வாங்கிய மத்திய வங்கிகளில் ஆர்பிஐ-ம் ஒன்றாகும்.  தற்போது ஆர்பிஐ கைவசம் உள்ள தங்கத்தில் 308 டன்னிற்கு நிகராக, ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.


514.1 டன் எடையிலான தங்கம், வங்கிகளின் கடனுக்கு நிகர்ப்படுத்தப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மத்திய வங்கிகளுக்கு, பாங்க் ஆஃப் இங்கிலாந்து பாரம்பரியமாக களஞ்சியமாக இருந்து வருகிறது.


அந்த வகையில் இந்தியாவிற்கும், சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்தே லண்டன், தங்கத்தை சேமித்து வைப்பதற்கான சிறந்த இடமாக தொடர்கிறது.


இந்தியாவும் - தங்கமும்:


பெரும்பாலான இந்தியர்களுக்கு, தங்கம் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உலோகமாக உள்ளது.  கடந்த 1991ல் நிலுவைத் தொகை நெருக்கடியைச் சமாளிக்க சந்திர சேகர் அரசாங்கம் விலைமதிப்பற்ற உலோகத்தை அடகு வைத்ததும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. ரிசர்வ் வங்கி 15 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 200 டன் தங்கத்தை வாங்கியது.


கடந்த சில ஆண்டுகளில், இந்திய மத்திய வங்கியின் கொள்முதல் மூலம் பங்குகளில் நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய ஆர்பிஐ அதிகாரி, "இது பொருளாதாரத்தின் வலிமையையும் நம்பிக்கையையும் காட்டுகிறது, இது 1991 இன் நிலைமைக்கு முற்றிலும் மாறுபட்டது" என்று தெரிவித்தார்.


கொண்டுவரப்பட்டது எப்படி?


உள்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 100 டன் தங்கம் என்பது, மார்ச் மாத இறுதியில் நாட்டில் உள்ள கையிருப்பில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.  அதற்கு பல மாதங்கள் திட்டமிடல் மற்றும் துல்லியமான செயலாக்கம் தேவைப்பட்டது. நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உட்பட அரசாங்கத்தின் பல பிரிவுகளுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது.


விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அதிக அளவிலான தங்கத்தை கொண்டுவர சிறப்பு விமானமும் தேவைப்பட்டது. இந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கியின் சேமிப்பு செலவில் சிலவற்றை சேமிக்க உதவும். இது பாங்க் ஆஃப் இங்கிலாந்துக்கு செலுத்தப்படுகிறது. அப்படி கொண்டு வரப்பட்ட தங்கமானது, மும்பையின் மின்ட் சாலை மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டிடத்தில் தங்கம் வைக்கப்பட்டுள்ளது.