நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “பராசக்தி” படம் ரூ.100 கோடி வசூலைப் பெற்றதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.  

Continues below advertisement

பொங்கலுக்கு வெளியான பராசக்தி

2026ம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி வெளியானது. ஜனவரி 10ம் தேதி வெளியான இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கிய நிலையில் டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். இப்படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி, பிரித்வி ராஜன், சேத்தன், ராணா டகுபதி, பைசல் ஜோசப் என பலரும் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் 100வது படம் என்ற சிறப்பையும் பராசக்தி பெற்றிருந்தது. 

இந்த நிலையில் பராசக்தி படம் முதலில் விஜய்யின் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீசாக இருந்த காரணத்தால் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. மாறாக சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக ஜனநாயகன் வெளியாகவில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கு தனி படமாக முதலில் பராசக்தி வெளியானது. 

Continues below advertisement

நெகட்டிவ் விமர்சனம்

ஏற்கனவே விஜய் படம் வெளிவராமல் அரசியல் செய்யப்படுவதாக கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள், இதற்கு பராசக்தி படக்குழுவும் உடந்தை என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பராசக்தி படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட, முதல் நாளே இப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் காத்து வாங்கியது. இயக்குநர் சுதா கொங்காரா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆகியோர் நேரடியாக விஜய் ரசிகர்களை சாடினர். 

எனினும் பராசக்தி படம் முதல் நாளில் ரூ.27 கோடியும், 2ம் நாளில் மொத்தம் ரூ.51 கோடியும் வசூல் சாதனை செய்ததாக பட நிறுவனம் தெரிவித்திருந்தது. 

பராசக்தி ரூ.100 கோடி வசூல்

அதன்பிறகு பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக கடந்த ஒரு வாரம் வசூல் நிலவரம் அறிவிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் பராசக்தி படம் ரூ.100 கோடி வசூலை பெற்றதாக போஸ்டர் வெளியானது. அவ்வளவு தான்.. நெட்டிசன்கள் கமெண்டுகளை சிதற விட்டு கலாய்த்து வருகின்றனர். நல்லா உருட்டுங்கடா.. வாயில வடை சுடாதீங்க.. பச்சை பொய் பேசுறீங்க.. நேத்து தான் ரூ.80 கோடி வசூல்ன்னு படிச்சேன்.அதுக்குள்ள எப்படி ரூ.20 கோடி ஏறிருக்கும் என சகட்டுமேனிக்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

இதனிடையே ஜனவரி 15ம் தேதிக்குப் பின் பராசக்தி படத்தின் வசூல் எகிறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனின் கடந்த படங்களான அமரன், மதராஸியை காட்டிலும் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.