கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குழாய்
சென்னை எண்ணூர் கோரமண்டல் உர நிறுவனத்துக்கு துறைமுகத்திலிருந்து, திரவ அம்மோனியாவை கொண்டு செல்ல , கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் 2023 - ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சேதமடைந்தது. இதனால் அமோனியா கசிவு ஏற்பட்டு 52 - க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு 5 கோடியே 92 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு உத்தர விட்டது. இந்த நிலையில், போபால் விஷவாயு துயர சம்பவத்துக்கு இணையாக விஷ வாயு கசிவு ஏற்படுத்திய, அமோனியா உர நிறுவனத்தை சீல் வைக்க உத்தரவிடக் கோரி, திருவொற்றியூர் முன்னாள் எம்.எல்.ஏ கே. குப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நிறுவனத்தில் அமோனியா பரிமாற்றம், சேமிப்பு மற்றும் தொடர்புடைய அபாயகரமான செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட வேண்டும். கடந்த 2023ம் ஆண்டு அம்மோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழு இழப்பீடு வழங்குமாறு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.