இட்லி கடை இசை வெளியீட்டில் தனுஷ் 


தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய தனுஷ் இட்லி கடை என தன் படத்திற்கு டைட்டில் வைத்ததன் காரணத்தை பகிர்ந்துகொண்டார். " சின்ன வயதில் எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருந்தது. எனக்கு தினமும் எப்படியாவது இட்லி சாப்பிட வேண்டும் . ஆனால் அதற்கான காசு என்னிடம் இருக்காது. வயதில் சென்று பூக்களை பறித்து கொடுத்தால் அதற்கு 2 ரூபாய் கூலி தருவார்கள். நானும் என்னுடைய அக்காக்களும் சேர்ந்து இரண்டு மணி நேரம் எங்களால் முடிந்த பூக்களை பறித்து கொடுப்போம். அதில் கிடைக்கும் 2 ரூபாயில் 5 இட்லி வாங்கி சாப்பிடுவேன். அப்படி உழைத்து சாப்பிடும் போது கிடைத்த ரூசி இன்று நான் எத்தனை பெரிய உணவு விடுதியில் சாப்பிட்டாலும் கிடைக்கவில்லை. என் சின்ன வயது நினைவுகளையும் நான் சந்தித்த மனிதர்களையும் வைத்து தான் இட்லி கடை படத்தை எடுத்திருக்கிறேன்" என தனுஷ் இந்த விழாவில் பேசினார்

Continues below advertisement



இயக்குநர் மகனுக்கு காசில்லையா?


தனுஷ் பேசி முடிந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவர் பேச்சுக்கு விமர்சனம் வரத் தொடங்கின. பிரபல இயக்குநரான கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் சின்ன வயதில் இட்லி சாப்பிட காசு இல்லை என்று சொல்வது நம்பும்படியாக இல்லை என்று பலர் கூறி வருகிறார்கள். தனுஷூக்கு ஆறு வயது இருந்தபோதே அவருடைய அப்பா என் ராசாவின் மனசிலே படத்தை இயக்கிவிட்டார். அதை வைத்து பார்த்தால் இட்லி சாப்பிட பணம் இல்லை என்று தனுஷ் ரசிகர்களிடம் சிம்பதி எதிர்பார்த்து இப்படி எல்லாம் சோக கதை சொல்கிறார் என பலர் அவரை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள். 


மறுபக்கம் தனுஷ் ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். இட்லி கடை படம் உருவானதற்கான காரணத்தையே தனுஷ் பகிர்ந்துகொண்டாரே தவிர பச்சாதாபத்தை எதிர்பார்த்து அவர் இந்த கதையை சொல்லவில்லை என தனுஷ் ரசிகர்கள் தரப்பு கூறியுள்ளார்கள்