அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு, 15 வயது நிரம்பி பதினாறாவது வயது தொடங்கி உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
‘’முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியால் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்ட நாள் இன்று!
56.5 இலட்சம் பார்வையாளர்கள், 70.38 இலட்சம் புத்தகங்களுடன் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம், வாசகர்கள்- எழுத்தாளர்கள் - மாணவர்களின் அறிவு சரணாலயமாகத் திகழ்வதில் பெருமை அடைகிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் நூலகங்களை அமைத்துவருகிறது முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு! அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை! இலட்சியம்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிவிட்டுள்ளார்.
அண்ணாவின் பிறந்த நாள் இன்று
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று (செப். 15) கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட புகழ் மாலையில், ’’தனது பேச்சால், எழுத்தால், பேரறிவால் இளைஞர்களை அணிதிரள வைத்து, திராவிடக் கொள்கைகளுக்கான ஜனநாயகப் படையைக் கட்டமைத்து மாநில உரிமைகளுக்காகப் போராட வைத்தவர்! இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராட வைத்தவர்! எளிய மக்களுக்கு உதவிட, தமிழ் மொழிக்கு அரணாக நின்றிட தன் தம்பிகளுக்கு ஆணையிட்டவர்!
இன்று வரையிலும் கொள்கை எதிரிகளால் வெல்ல முடியாத சட்டங்களை இயற்றியவர்! பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளில் அவரை கொண்டாடுவோம்! வாழ்க அண்ணா!’’ என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 70.38 இலட்சம் புத்தகங்கள், இலக்கிய புத்தகங்கள், பாட நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிறார் இலக்கிய நூல்கள் என பல்வேறு வகையான புத்தகங்கள் தளம் வாரியாக தொகுக்கப்பட்டு, பிரித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.