நடிகர் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்துக்கு மாஸ் இன்னும் குறையவே இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 800 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க சந்திரமுகி-2 படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனாலும் படம் முதல் பாகத்தை போல இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 90's கிட்ஸ்களின் ஆல்டைம் பேவரைட்டான சந்திரமுகி படத்தில் ரஜினியை விட ஜோதிகாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும். சந்திரமுகி, வேட்டையாபுரம் அரண்மனை, கங்கா, சரவணன், முருகேசனாக வரும் வடிவேலுவின் காமெடி என அனைத்தும் இன்று கேட்டால் கூட ஒரு சீன் கூட மாறாமல் அனைவருக்கும் சொல்ல தெரியும்.
அதனாலேயே டிவியில் இப்படம் ஒளிபரப்பாகும் போதெல்லாம் எந்த வேலை இருந்தாலும் அதனை அப்படியே விட்டு விட்டு பார்ப்பவர்கள் ஏராளம்.அந்த வகையில் நேற்று சன் டிவியில் சந்திரமுகி படம் ஒளிபரப்பானது. இதற்கான விளம்பரங்களும் ஒரு வாரமாகவே வெளியாகி வந்ததால் ஏராளமானோர் படம் பார்ப்பதை வீடியோ, போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கள் நினைவுகளை வெளிப்படுத்தினர். இதனைப் பார்க்கும் போது நல்ல படங்கள் இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் கழித்து ஒளிபரப்பானாலும் அது ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் என்பது நிரூபணமாகிறது. மேலும் ட்விட்டரிலும் #Chandramukhi என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகியுள்ளது.