விடுதலை படத்தை பாராட்டி ட்வீட் போட்ட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார். மேலும் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முன்னதாக விடுதலை படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தியேட்டரில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் காட்சிகள் அதிகமாகி ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நடிகர் சூரி தொடங்கி படத்தில் நடித்த பலரின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சூரியும் அறிக்கை ஒன்றை வெளியீட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
அதேசமயம் பிரபலங்கள் பலரும் விடுதலை படத்தை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலை படம் சூப்பராக இருந்ததாகவும், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைக் கண்ட இணையவாசிகள் பிரதீப் மீது அதிருப்தியடைந்து சரமாரியாக கருத்துகளை பதிவிட தொடங்கினர். ஒருவர், படத்தை பார்த்து பாராட்டி கருத்துப்போடுவது பாராட்டுக்குரிய விஷயம் தான். ஆனால் சமூகவலைத்தளத்தில் வெற்றிமாறனின் பெயரை குறிப்பிடும் போது தயவு செய்து வெற்றிமாறன் சார் என்று குறிப்பிடுங்கள். இது எனது வேண்டுகோள் என தெரிவித்திருந்தார்.
இதேபோல் இன்னொரு இணையவாசி, ஒரு படம் நல்லா போனா போதுமே மரியாதை கிடையாதா எனவும், வெற்றிமாறனை சார் என சொன்னால் குறைந்து விடுவீர்களோ என சரமாரியாக விமர்சிக்க தொடங்கினர். அதேசமயம் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிட்டதால் அவரது ட்விட்டர் பக்கம் கருத்து மோதலால் நிரம்பி வழிந்தது.
கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக “லவ் டுடே” படத்தை இயக்கி அப்படம் மூலம் ஹீரோவாக பரிணாமித்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.