கவின் கொலைக்கு மாரி செல்வராஜ் கண்டனம்
நெல்லை மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் குமார் அதிக்க சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் சாதிய வன்முறைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் ஆளும் கட்சியான திமுக அரசை பலர் விமர்சித்து வருகிறார்கள். கவின் கொல்லப்பட்டதற்கு திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம் … சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்." என அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவைத் தொடர்ந்து மாரி செல்வராஜை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
சாதி பார்த்து கண்டனம் தெரிவிக்கிறீங்க
கவின் கொலை சம்பவத்திற்கு முன்பாக சில வாரங்கள் முன்பாக சிவகங்கை மடப்புரம் அஜித் குமார், நகை காணாமல் போனது தொடர்பாக, நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் கீழ் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அஜித்குமாரை தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் உயிரிழந்தார். அஜித் குமாரை காவல் அதிகாரிகள் அடித்து துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் அஜித் குமார் கொலைக்கு திரைப்பட பிரபலங்கள் யாரும் எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்கவில்லை. குறிப்பாக சமூக அரசியல் மாற்றங்களைப் பேசும் பா ரஞ்சித் , மாரி செல்வராஜ் , வெற்றிமாறன் முதலிய இயக்குநர்கள் இந்த விஷயத்தில் மெளம் காத்தது பலருக்கு அதிர்ச்சியளித்தது.
அந்த வகையில் தற்போது மாரி செல்வராஜ் கவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அவரை திரைப்பட ரிவியுவர் இட்ஸ் பிரசாந்த் உள்ளிட்ட சமூக வலைதள பிரபலங்கள் விமர்சித்துள்ளார்கள். "கொடிய இறப்பாவே இருந்தாலும் ஜாதி பார்த்து தானே கண்டனம் தெரிவிக்குறீங்க ? இதே கண்டனம் அஜித்குமாருக்கு ஏன் இல்லை ? ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? ஏன் தமிழ்நாடு அரசுக்கு இதே அழுத்தம் தரவில்லை ? பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியே நீங்க தான் !" என இட்ஸ் பிரசாந்த் அவரை விமர்சித்து பதிவிட்டுள்ளார்