காவிரி விவகாரத்தை காரணம் காட்டி நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பினர் பிரச்சினை செய்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். 


தமிழ்நாட்டிற்கும் கர்நாடகவிற்கும் இடையே நீண்ட காலமாக  பிரச்சினையாக உள்ள காவிரி விவகாரம் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு - கர்நாடகாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிற்கு கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்து விட சம்பந்தப்பட்ட ஆணையம் உத்தரவிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாட்டிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 29) கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 
இப்படியான சூழலில் நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பை சார்ந்தவர்கள் பிரச்சினை செய்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இடாகி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  சார்பில் உருவாகியுள்ள படம் “சித்தா”. பண்ணையாரும், பத்மனியும் மற்றும் சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில்  சித்தார்த், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று (செப்டம்பர் 28) உலகமெங்கும் வெளியானது. 


இதனிடையே நேற்று பெங்களூரில் சித்தா படத்தின் ப்ரமோஷன் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர்  மேடையில் அமர்ந்திருந்த சித்தார்த்தை நோக்கி கன்னடத்தில் ஏதோ கூறினர். அவர் நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சித்தார்த்தை வெளியே செல்லுமாறும் வலியுறுத்தினர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






தொடர்ந்து சித்தார்த்தை மிரட்டும் தொனியில் பேசியதால் அவர்  மேடையில் இருந்து எதுவும் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே பாதியிலே இறங்கிச் சென்றார். ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் பிரச்சினையால் தமிழக – கர்நாடக எல்லையில் கூடுதல்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில்,  கன்னட அமைப்பினர் சித்தா பட நிகழ்ச்சியின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 


இப்படியான சூழலில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், சித்தார்த்திற்கு நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ள அவர், “பல தசாப்தங்களாகப் பழமையான இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரகாஷ் ராஜ் அந்த பதிவில் கூறியுள்ளார்.