நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சி எது என எழுப்பப்பட்ட கேள்விக்கு ரசிகர் ஒருவர் அளித்த பதில் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இந்த படம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனாக சன்னி சிங் ஆகியோர் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியிருந்தது. 


இதனிடையே பாகுபலிக்குப் பிறகு பிரபாஸூக்கு எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்காத நிலையில், ஆதிபுருஷ் படத்தின் டீசர், ட்ரெய்லர் இரண்டும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் காட்சிகளை விட மோசமாக இருப்பதாக புகார் எழுந்ததால் ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டு கிராபிக்ஸ் காட்சிகள் மேம்படுத்தப்பட்டு வெளியாகியும் கடும் விமர்சனங்களைப் பெற்றது. 




அதேசமயம் வசூலிலும் ஆதிபுருஷ் படம் பட்டையை கிளப்பி வருகிறது.4 நாட்கள் முடிவில் உலக அளவில் இந்த படம் ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையில் இயக்குநர் ஓம் ராவத் கேட்டுக் கொண்டதற்கிணங்க தியேட்டர்களில் ஹனுமனுக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டது, தியேட்டருக்கு குரங்கு வந்தது என கடந்த 5 நாட்களாகவே ஆதிபுருஷ் படம் தான் பேசுபொருளாக உள்ளது. 


இப்படியான நிலையில், பிரபாஸின் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆதிபுருஷ் படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி எது?"  என்ற கேள்வியை எழுப்பி, இணையவாசிகளிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தார். ஆனால் விஷால் என்னும் நபர், தியேட்டரில் உள்ள ‘வெளியேறும் பகுதி’யை போட்டோ எடுத்து போட்டு, இந்த படத்தில் இருந்து வெளியேறுவது தான் எனக்கு பிடித்த காட்சி’ என நக்கலாக பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட் இணையத்தில் வைரலான நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களால் படக்குழு சற்று அதிர்ச்சியடைந்துள்ளது. 


முன்னதாக  ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் பிரபாஸ் அளித்த பேட்டி ஒன்றில், ‘ராமர் கேரக்டரில் நடிக்க எனக்கு பயம் இருந்தது.அத்தகைய மரியாதைக்குரிய நபரை திரையில் சித்தரிப்பது ஒரு பெரிய பொறுப்பாக இருந்தது.நாம் அனைவரும்  இதிகாசக் கதையான ராமாயணத்தை கேட்டு வளர்ந்தவர்கள் என்பதால் படத்தில் குறிப்பிடப்பட்ட பகுதியை  மிகவும் நம்பகத்தன்மையுடனும் மரியாதையுடனும் காட்ட வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.