தென்னிந்திய சினிமா எத்தனையோ திறமையான நடிகைகளை கடந்து வந்துள்ளது. அதில் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் அசாத்தியமான நடிப்புத் திறமை பெற்று இருந்தும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் தன்னை நிரூபித்து கொள்வதற்காக பெரிதும் போராடும் ஒரு நடிகை பிரியாமணி. 


 



தேசிய விருது பெற்ற நடிகை:


இயக்குநர் இமயம் பாரதிராஜா 'கண்களால் கைது செய்' திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து ‘கனாக்காலம்’ படத்தில் நடித்து இருந்தார்.


ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரியாமணிக்கு அமீர் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக ‘பருத்திவீரன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக அசுர தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றாலும் அதற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு சில படங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் வந்தன. 


பிரபலத்தைக் கொடுத்த ஜவான் :


அதனால் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பிரியாமணிக்கு அங்கும் ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. பின்னர் அதுவும் குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்தார்.  ஆனால் மற்றொருபுறம் வெப் சீரிஸ் உலகில் கால்பதித்து அங்கு முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். தொடர்ந்து சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஜவான்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பாலிவுட்டில் அவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது. 


 



 


'மைதான்' படத்தில் பிரியாமணி:


அஜய் தேவ்கன் நடிப்பில் இந்திய கால்பந்து பயிற்சியாளரான சையத்  அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'மைதான்'.  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்துள்ளார். அமீத் ஷா இயக்கத்தில் ஜீ ஸ்டூடியோஸ் பேனரின் கீழ்  போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் மும்பையில் முன்னதாக நடைபெற்றது. 


போனி கபூரை விளாசும் நெட்டிசன்கள்


 






படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த ஈவென்டில் நடிகை பிரியாமணி, தயாரிப்பாளர் போனி கபூர் கலந்து கொண்டனர். இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கும் போது போனி கபூர், பிரியா மணியை தொட்டபடி நின்றது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் போனி கபூரை வன்மையாகக் கண்டித்து வறுத்தெடுத்து வருகிறார்கள். 68 வயதாகும் போனி கபூர் பிரியாமணியை சங்கடத்தில் ஆழ்த்தி நெருக்கமாக நிற்கிறார் என்றும், அவரது இடுப்பில் கை வைத்தபடி ஏன் இப்படி போனி கபூர் போஸ் கொடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.




இப்படத்தில் பிரியாமணி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் தான் அணுகப்பட்டார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.