நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அஜித் நடித்த துணிவு படம் சூப்பரான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


கொரோனா காலக்கட்டத்துக்குப் பின் இந்தியாவில் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். முன்னதாக டிவி, சினிமா தியேட்டர்கள் என்றிருந்த மக்கள் தற்போது ஒரு படம் ரிலீசானால் எந்த ஓடிடி தளம் என கேட்கும் அளவுக்கு அவற்றின் இருப்பு அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. ஓடிடி தளங்களும் ரசிகர்களை கவரும் வகையில் முன்னணி நடிகர்களின் படங்களை பூஜை போடும் போதே அதிக விலைக்கு வாங்குகிறது. 


அந்த வகையில் கடந்த பொங்கலுக்கு அஜித் நடித்த துணிவு படம் வெளியானது. தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார். வங்கிகளின் செயல்பாடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக ஹெச்.வினோத்துடன் அஜித் இணைந்த முந்தைய 2 படங்களும் சொதப்பிய நிலையில், இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 






துணிவு படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் இதில் நடித்த நிலையில் ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்திருந்தார். துணிவு படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றிய நிலையில் ஓடிடி தள உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. 


ஆனால் துணிவு படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்தது என்ற விவரத்தை படக்குழு வெளியிடவில்லை. மறுபக்கம் துணிவுக்கு போட்டியாக விஜய் நடிப்பில் வாரிசு படம் களம் கண்ட நிலையில், அப்படம் ரூ.300 கோடி வசூலை பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனால் உண்மையான வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். 


இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் துணிவு படம் வெளியானது. அன்று முதலே டாப் 10 பட வரிசையில் துணிவு படம் இடம் பெற்று வந்தது. இந்நிலையில்  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்ற டாப் 10 பட வரிசையை  நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடும்.


அந்த வகையில் பிப்ரவரி 6 முதல் 12 வரையிலான வாரத்திற்கான பட வரிசையில் துணிவு படத்தின் தமிழ் பதிப்பு 3வது இடமும், இந்தி பதிப்பு 4வது இடமும் பெற்றுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக இந்தியப் படம் ஒன்று இரண்டு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.