உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் .நெட்ஃபிளிக்ஸ் தற்போது விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்கள், வெப் சீரிஸ் , ஆவணப்படங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது.
ஆனால், வருகிற நவம்பர் 3ம் தேதி முதல் "Basic with Ads" என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த பத்தாண்களில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளதால் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிற்கு 25 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களை பெறும் நிறுவனம், வரலாறு காணாத அளவிற்கு வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதனை சரி செய்ய நெட்ஃபிளிக்ஸ் பல மாறுதல்களை சமீப காலமாக மேற்க்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் “"Basic with Ads"
அது என்ன "Basic with Ads" ?
இந்த புதிய Basic with Ads திட்டம் ஆனது, ஏற்கனவே அணுக கிடைக்கும் Basic திட்டத்தை போலவே 720p/HD வரையிலான வீடியோ தரத்தை வழங்கும். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை விளம்பரங்களை வழங்கும். இந்த விளம்பரங்கள் ஒருமுறை ஒளிபரப்பாகும் பொழுது 15 முதல் 30 வினாடிகள் வரையில் நீளும் என்பதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி முதல் இந்த புதிய சந்தா வசதி அறிமுகமாகவுள்ளது. Netflix தலைமை இயக்க அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் கூறுகையில் புதிய "பேசிக் வித் ஆட்ஸ்" சந்தாக்கள் அமெரிக்காவில் $6.99 செலவாகும், இது விளம்பரங்கள் இல்லாத அடிப்படை விருப்பத்தை விட மூன்று டாலர்கள் குறைவாக இருக்கும் என்றார்.
மேலும் பேசிய அவர் “ நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரையில்தான் விளம்பரங்களை பதிவேற்றவுள்ளோம். அதற்கு மேலாக விளம்பரங்களை காட்சிப்படுத்தும் எண்ணம் இல்லை. மேலும் இந்த விளம்பரங்களை முடிந்த அளவு ரிப்பீட்டடாக இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என்றார்.
நெட்ஃபிளிக்ஸ் தனது ஸ்ட்ரீமிங் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து விளம்பரங்கள் ஒளிப்பரப்பு செய்வதை தவிர்த்து வந்தது. இருப்பினும் தற்போது பயனாளர்கள் இழப்பு , சந்தைப்போட்டி , நுகர்வோர் பணவீக்க அதிகரிப்பு உள்ளிட்ட சவால்களால் நெட்ஃபிளிக்ஸ் தற்போது இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த பேசிக் வித் ஆட்ஸ் சந்தாவின் கீழ் பயனாளர்கள் குறைவான படங்களையும் சீரிஸ்களையும் மட்டுமே பார்க்க முடியும் என்றும் , அதனை பதிவிறக்கம் செய்யும் வசதிககளும் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
இதே போல Netflix இன் போட்டியாளரான டிஸ்னி, அதன் சொந்த விளம்பர ஆதரவு சந்தாவை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.