Netflix IC 814 Controversy: IC 814 வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ள தீவிரவாதிகளின் பெயர்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
IC 814 வெப் சீரிஸ் சர்ச்சை:
'IC 814: The Kandahar Hijack' என்ற வெப் சீரிஸை ஒளிபரப்பியது தொடர்பாக, Netflix இன் கண்டெண்ட் ஹெட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கிய இந்தத் தொடர்ல், ஐசி 814 கடத்தல்காரர்களின் இஸ்லாமிய அடையாளங்களை மறைக்கும் வகையிலான மாற்றுப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து சர்ச்சையில் சிக்கியது. செப்டம்பர் 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை நேரில் ஆஜராகுமாறு Netflix இன் கண்டெண்ட் ஹெட்டை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. கடத்தப்பட்ட விமானத்தின் கேப்டனாக இருந்த தேவி சரண் மற்றும் பத்திரிக்கையாளர் ஸ்ரீஞ்சோய் சவுத்ரி ஆகியோர் எழுதிய 'ஃப்ளைட் இன்ட் ஃபியர்: தி கேப்டனின் ஸ்டோரி' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
பாஜக எதிர்ப்பு:
இதுதொடர்பாக பாஜகவின் ஐடி செல் தேசிய பொறுப்பாளர் அமித் மாளவியா, இயக்குனர் அனுபவ் சின்ஹாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ”IC-814 ஐக் கடத்தியவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள், அவர்கள் இஸ்லாமிய அடையாளங்களை மறைக்க மாற்றுப்பெயர்களைப் பெற்றனர். திரைப்படத் தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா, அவர்களது முஸ்லீம் அல்லாத பெயர்களை உயர்த்துவதன் மூலம் அவர்களின் குற்ற நோக்கத்தை சட்டப்பூர்வமாக்கினார். முடிவு? பல தசாப்தங்களுக்குப் பிறகு, IC-814 ஐ இந்துக்கள் கடத்தியதாக மக்கள் நினைப்பார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.
பயன்படுத்தப்பட்ட பெயர்கள் என்ன?
கடத்தலுக்கு காரணமான ஐந்து பேரும் தொடரில் 'ஹெட்', 'டாக்டர்', 'பர்கர்', 'போலா' மற்றும் 'சங்கர்' போன்ற குறியீட்டுப் பெயர்களுடன் சித்தரிக்கப்பட்டடுள்ளனர். அதில் 'போலா' மற்றும் 'சங்கர்' ஆகிய இரு பெயர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உண்மை மறைக்கப்பட்டதா?
1999 இல் நடந்த இந்தியன் ஏர்லைன்ஸ் காத்மாண்டு-புது டெல்லி விமானத்தின் , கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபவ் சின்ஹா, பயங்கரவாதிகளுக்கு மாற்றுப் பெயர்களாகப் பயன்படுத்தப்பட்ட இந்துப் பெயர்களைத் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததாக இணையத்தில் குற்றம்சாட்டப்படுகிறது. உண்மைகளைத் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும், மத முரண்பாடுகளைத் தூண்டுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், வெப் சீரிஸில் பயன்படுத்தப்பட்ட குறியீட்டுப் பெயர்கள் 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட MEA ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 6, 2000 அன்று வெளியிடப்பட்ட MEA செய்திக்குறிப்பின்படி, கடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விமானத்தை கடத்திய ஐந்து தீவிரவாதிகளின் ஆதரவுப் பிரிவை உள்ளடக்கிய நான்கு ஐ.எஸ்.ஐ செயல்பாட்டாளர்களை மும்பை காவல்துறை பிடித்தது.
அந்த 5 பேரும் இப்ராகிம் அதர், ஷாகித் அக்தர் சயீத், குல்ஷன் இக்பால், சன்னி அகமது காசி, மிஸ்திரி ஜாகூர் இப்ராகிம் மற்றும் ஷகிர் என அடையாளம் காணப்பட்டனர். கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளுக்கு இந்த கடத்தல்காரர்கள் முறையே (1) ஹெட், (2) டாக்டர், (3) பர்கர், (4) போலா மற்றும் (5) சங்கர்” என அறியப்பட்டனர். வெப் சீரிஸிலும் கடத்தல்காரர்களுக்கு அதே குறியீட்டுப் பெயர்களைப் பயன்படுத்துகின்றன. ஒரு அத்தியாயத்தில், அதுவரை 'ஹெட்' என்று அழைக்கப்பட்ட தீசிரவாதிகளில் ஒருவரின் பெயர் 'இப்ராஹிம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.