நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தாங்கள் வெளியிட்ட வெப் சீரிஸ்களிலேயே அதிகளவிலான பார்வையாளர்களைப் பெற்ற வெப் சீரிஸ் எனக் கொரியன் த்ரில்லர் தொடரான `ஸ்குவிட் கேம்’ தொடரை அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 17 அன்று வெளியான, `ஸ்குவிட் கேம்’ தொடர், இதுவரை அதிகாரப்பூர்வமாக 111 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. 


நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், 111 மில்லியன் பேருக்கும் மேலான பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, `ஸ்குவிட் கேம்’ தொடர் சர்வதேச அளவில் நம்பர் ஒன் இடம்பெற்றிருப்பதையும் அறிவித்துள்ளது. இந்தத் தொடரை இதுவரை பார்வையிடாதவர்களுக்காக சிறிய டீசர் ஒன்றையும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. 


`ஸ்குவிட் கேம்’ தொடர் சுமார் 80 நாடுகளில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்றுள்ளதால், இதன் மீது இவ்வாறான பிரபலத் தன்மை விழுந்துள்ளது. வெளியாகி 28 நாள்களில் சுமார் 82 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று, நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்த Bridgerton தொடரையும் வீழ்த்தியுள்ளது `ஸ்குவிட் கேம்’. 



வழக்கமான கொரியன் த்ரில்லர் படங்களைப் போல அதீத வன்முறைக் காட்சிகள் இதில் இடம்பெற்றிருந்தாலும், அட்டகாசமான கதையாலும், தேர்ந்த நடிகர்கள், அவர்களுக்கான கதாபாத்திரங்கள், திரைக்கதை எனப் பல சிறப்பம்சங்களால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது `ஸ்குவிட் கேம்’ தொடர். 


நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி டெட் சாராண்டோஸ் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற தொழில்நுட்பக் கலந்துரையாடல் கூட்டத்தில் `ஸ்குவிட் கேம்’ மிகப்பெரிய பிரபலமான தொடராக எப்படி மாறியது என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமே ஆச்சரியப்படுவதாகக் கூறியுள்ளார். `சர்வதேச அளவில் இவ்வளவு பெரிய ஆதரவு பெருகும் என நாங்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார். 






தென்கொரியாவின் இணைய வசதிகளை வழங்கும் எஸ்.கே.பிராட்பேண்ட் என்ற நிறுவனம், `ஸ்குவிட் கேம்’ தொடருக்கு அதிகமாகக் கூடிய பார்வையாளர்களால் தங்கள் நெட்வொர்க் டிராஃபிக் அதிகரித்ததாகவும், அதற்கான தொகையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தர வேண்டும் எனவும் வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



CNBC நிறுவனம் இந்த எண்ணிக்கை மொத்த வெப் சீரிஸையும் பார்க்காதவர்களையும் குறிக்கும் எனக் கூறியுள்ளது. 111 மில்லியன் பார்வையாளர்கள் மொத்த வெப் சீரிஸையும் பார்க்காவிட்டாலும், அதனைத் தொடங்கி, வெறும் 2 நிமிடங்கள் பார்த்திருந்தாலும் அது கணக்கில் கொள்ளப்படும் எனக் கூறியுள்ளது. 


கொரோனா பெருந்தொற்று காரணமாக, திரையரங்குகளில் வெளியாவதாக எதிர்பார்க்கப்பட்ட பெரும்பான்மையான படைப்புகள் ஓடிடி தளங்களில் வெளியாவதாலும், மக்கள் ஓடிடி தளங்களைப் பெரிதும் நாடுவதாலும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சர்வதேச திரைப்படங்களையும், பிற மொழித் திரைப்படங்களையும் வெளியிட்டு விமர்சகர்களின் பாராட்டுகளையும், பெரும் லாபத்தையும் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டுகளில், டார்க், மணி ஹெய்ஸ்ட், தி பிளாட்ஃபார்ம் முதலான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்த படைப்புகள் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.