ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் திரையரங்கிற்கு போட்டியாக பல திரைப்படங்களை வெளியிடுகிறது. க்ரைம், த்ரில்லர், காதல், டிராமா என வெளியாகும் திரைப்படங்கள் ஏராளம். அதில் த்ரில்லர் காட்சிகளையும், யூகிக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்த திருப்பங்களையும் கொண்ட தமிழ் திரைப்படங்களுக்கு என தனி பட்டியலே உள்ளது. இந்தப் படங்களின் பட்டியலை கீழே பார்க்கலாம்! 


திருவின் குரல்:


அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா நடித்திருக்கும் படம் திருவின் குரல். கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான இந்த படத்தை லைக்கா புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் நடைபெறும், கொலை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களை கூறும் படமாக திருவின் குரல் உள்ளது. வாய்பேச முடியாமல், காது கேளாத மாற்று திறனாளியாக இருக்கும் அருள் நிதி, மருத்துவமனையில் தனது தந்தைக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எதிர்ப்பது கதையாக உள்ளது. அரசு மருத்துவமனையில் நிகழும் ஊழல்களை மட்டுமே சில படங்கள் கூறி வந்த நிலையில், திருவின் குரலில் அரசு மருத்துவமனையில் நடைபெறும் குற்றங்களை திருவின் குரல் மூலம் இயக்குநர் ஹரிஷ் பிரபு கூற முயன்று இருக்கிறார். இந்த படத்தில் அஷ்ரப் வில்லனாகவும், ஆத்மிகா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். 


கண்ணை நம்பாதே


இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி இருக்கும் படம் கண்ணை நம்பாதே. ஆரம்பத்தில் கொலையில் தொடங்கும் படம் இறுதி வரை த்ரில்லர் காட்சிகளுடனே நகர்ந்து செல்லும். வாடகை வீடு எடுத்து தங்கி இருக்கும் உதயநிதி ஸ்டாலினும், பிரசன்னாவும் எதிர்பாராத விதமாக ஒரு கொலையில் சிக்கி கொள்கின்றனர்.


அது யார் செய்கிறார்கள், அதன் பின்னணி என விசாரிப்பதே கண்ணை நம்பாதே கதை. ஆரம்பத்தில் உதயநிதியுடன் ஒரே வீட்டில் வசிக்கும் பிரசன்னாவால், பூமிகா கொல்லப்படுவதாக காட்டினாலும், படத்தின் இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக்குடன் படம் நகரும். உதயதியின் காதலியாக ஆத்மிகாவும், பூமிகாவுடன் சேர்ந்த வில்லனாக ஸ்ரீகாந்த் நடித்திருப்பார்கள். 


கலகத் தலைவன்


மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரவ் நடித்திருக்கும் படம் கலகத் தலைவன். கார்ப்பரேட் நிறுவனத்தின் பித்தலாட்டத்தை கூறும் படமாக கலகத் தலைவன் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் ஒன்று புதிய கனரக வாகனத்தை தயாரிக்கிறது. ஆனால், எமிஷன் டெஸ்டில் அந்த வாகனம் அதிகப்படியான புகையை வெளியிடுவதால் மார்க்கெட்டில் வெளிவர தடை விதிக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் ரகசியத்தை மீடியாவில் கசிய விடுவது உதயநிதி ஸ்டாலின்.


இதனால் உதயநிதி ஸ்டாலினை பின் தொடர்ந்து பழிவாங்க துடிக்கிறார் வில்லனான ஆரவ். கண்ணாமூச்சு ஆட்டமாக படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் நகர்ந்து செல்லும் கலகத்தலைவன் படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருப்பார். 


ராங்கி


எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் த்ரிஷாவை வைத்து இயக்கி இருக்கும் படம் ராங்கி. இந்த படத்துக்கான கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். சமூக வலைதளத்தில் போலியான கணக்குகளை வைத்து நடைபெறும் அசம்பாவிதங்களையும், இளம் தீவிரவாதியின் காதலையும் கூறுகிறது ராங்கி. தனது அண்ணன் மகளின் புகைப்படத்தின் மீது தீவிரவாதி காட்டும் காதலும், அதன்பின்னர் நடக்கும் சம்பவங்களுமே படத்தின் மீதிக்கதை. இதில் த்ரிஷா சில ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருப்பார். தீவிரவாதியாக வரும் ஆலிம் காதல் வசனங்களால் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளார். 


பீஸ்ட்


நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்திருக்கும் படம் பீஸ்ட். வழக்கம்போல் மால் ஒன்றை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொண்டு, சிறையில் இருக்கும் தலைவனை விடுதலை செய்ய வேண்டுமென மிரட்டுவதும், அவர்களிடம் இருந்து ரா அதிகாரியான மக்கள் மக்களை காப்பாற்றுவதுமே படத்தின் கதை. பழைய கதையாக இருந்தாலும் விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகளை நெல்சன் படத்தில் காட்டி இருப்பார். 


காட்டேரி


டிகே இயக்கத்தில் வைபவ் நடித்திருக்கும் பேய் படம் தான் காட்டேரி. ஒரு கிராமத்தில் இருக்கும் தங்கத்தை தேடி வைபப், கருணாகரன், ரவி மரியா உள்ளிட்டோர் செல்கின்றனர். ஆனால் அந்த ஊரில் வரலட்சுமி உட்பட்ட பலரும் பேய்களாக அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த பேய்களிடம் இருந்து ஹீரோ தப்பித்தாரா இல்லையா என்பதையே காட்டேரி படம் கூறுகிறது. 


மகாமுனி


சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா நடித்திருக்கும் படம் மகாமுனி. இரண்டு கேரக்டரில் நடித்திருக்கும் ஆர்யாவை வித்யாசமான காட்சிகளில் காட்ட முயற்சித்திருக்கும் படமே மகாமுனி. ரவுடி ஆர்யாவும், பக்தி மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டு ஆர்யாவும் கதையின் அடுத்தடுத்த திருப்பங்களாக உள்ளனர். கொலை வழக்கில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் ஆர்யாவை போலீசார் கைது செய்வதும், அடுத்து என்ன நடக்கும் என்ற திருப்பங்களை கொண்டதே மகாமுனி படம். 


இதேபோன்று நெட்பிளிக்ஸில், அடுத்தடுத்த த்ரில்லர் காட்சிகளை கொண்ட படங்களாக  பூச்சாண்டி, பூமிகா, எச்சரிக்கை, கொலையுதிர் காலம், புரியாத புதிர், சினம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.