நீயா? நானா?


பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான “நீயா நானா”(Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சிதான் நீயா நானா. 


வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்பராகும் இந்த ஷோவை கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது.  அந்த வகையில், இந்த வாரம் ‘டிரெண்டியான தாத்தா பாட்டி மற்றும் இந்த தலைமுறை இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


"மனதிற்கு பிடித்ததை நாங்கள் எப்போதும் செய்வோம்”


அதில் தங்களுக்கு மனதிற்கு பிடித்ததை நாங்கள் எப்போதும் செய்வோம் என்றும், வயதானாலும் எங்களுடைய மனம் மாறாது என்றும் தாத்தா பாட்டி ஆனாலும் ட்ரெண்டியாக இருப்போம் என்று சிலர் நீயா நானா நிகழ்ச்சியில் தாங்கள் எப்படி ட்ரெண்டியாக மாறினோம் என்று தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். ஆனால் இவர்கள் ட்ரெண்ட்டாக மாறியதால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று ஒரு சில இளம் தலைமுறையினர் அதற்கு விவாதம் நடத்தினர். 


நீங்கள் எதையெல்லாம் டிரெண்டிங்னு சொல்லுறீங்க என்று டிரெண்டிங் தாத்தா பாட்டி குழுவிடன் கேள்வியை முன்வைத்தார் கோபிநாத். அதற்கு, நெட்பிளிக்ஸில் கொரியன் சீரிஸ் பார்ப்பது, ஒரு நாளைக்கு 30 அல்லது 40 செல்ஃபி எடுப்பது, Gym செல்வது, விதவிதமான உணவுகளை சாப்பிடுவது, மார்டன் ஆடைகளை அணிவது, கம்மல், நைல் பாலிஸில், ஜீன்ஸ், டி ஷர்ட் அணிவது போன்றவைகளை டிரெண்டிங் என்று கூறினர்.


கடுப்பான கோபிநாத்


இதனை தொடர்ந்து,  இளைஞர்கள் தரப்பில் இருந்து, இவர்கள் உடல்தோற்றம் தான் டிரெண்டியாக மாற்றம் ஏற்பட்டதே தவிர, இவர்களது சிந்தனை பிற்போக்கான சிந்தனையாக தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. குறிப்பாக, சாதி, தன்பாலின திருமணம் பற்றி இளைஞர்கள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. 


இதற்கு டிரெண்டிக் தாத்தா பாட்டி தரப்பில் இருந்து பால் புதுமையினரின் காதல் திருமணம் செய்து கொள்வதே எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்  இப்படி தன்பாலின திருமணம் செய்து கொள்வது நம் கலாசாரத்தில் இல்லை என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து, டிரெண்டிக் தாத்தா பாட்டி தரப்பில் இருந்து ஒரு நபர் கேள்வி எழுப்பினார். அதாவது, தன்பாலின திருமணம் செய்து கொள்ளலாம் என்று சில இளைஞர்கள் கூறி வரும் நிலையில்,  அப்போ அவர்கள் இதுபோன்று தான் இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். 


கோபிநாத் அட்வைஸ்


இதற்கு கடுப்பான கோபிநாத், ஒருவர் உரிமை சார்ந்த கேள்வி எழுப்பும் ஒரே காரணத்திற்காக நீயும் அதுதானா என்று கேள்வி கேட்பது? என்பது மிகவும் தவறான ஒன்று. பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் குரல் கொடுக்கனும் நினைத்தால் எதற்குமே விடிவுகாலம் வந்திருக்காது.  இந்த உலகத்தில் எப்படி பல விஷயங்களும் விடிவு வந்தது என்றால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்ததால் மட்டும் அல்ல. அவர்களின் நியாயத்தை புரிந்துக் கொண்டு மற்றவர்கள் கூட்டுச்சேர்ந்து குரல் கொடுத்ததால் தான் மாற்றம் ஏற்பட்டது.  


ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் குரல் கொடுக்கவில்லை. அப்படி உன் பிரச்சைனையே நீ மட்டும் பாத்துக்கோ என்று சொல்கின்ற ஒரு சமூகம் நாகரீகமான சமூகமாக இருக்கவே முடியாது. இப்படி தனித்தனியாக பிரித்து விடாதீர்கள்... சமீப காலத்தில் நடக்கிற பெரிய அரசியலே இதுதான். அவரவர்களுக்கு பிடித்தப்படி அவர்களை வாழவிடுங்கள். சரியோ தவறோ அவர்கள் விருப்பம் என்று கோபிநாத் பேசினார். இதுபோன்று கோபிநாத் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.