நீயா? நானா?
பிக்பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் “நீயா நானா” (Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஆராயும் நிகழ்ச்சியாக நீயா நானா பல ஆண்டுகளாக லைக்ஸ் அள்ளி வருகிறது.
வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோவை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் “வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதாவது வாங்கும் சம்பளத்தில் செலவுகளை அடக்க முடியுமா? இல்லையா? என்பதுதான் இந்த விவாதத்தின் பொருள். இதனடிப்படையில் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்கள் ஒரு பக்கம், வரவுக்குள் செலவுகளை அடக்க ஐடியா கொடுப்பவர்கள் இன்னொரு பக்கம் என நிகழ்ச்சி சென்றது.
”காய்கறி விலைதான் உயர்வு":
சமீபத்தில் நீங்க எந்த பொருட்களை அதிக விலைக்கு வாங்குனீர்கள் என்று கோபிநாத் கேள்வியை முன்வைத்தார். இதற்கு செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்களின் தரப்பில், தக்காளி உட்பட மற்ற காய்கறிகள் விலை, மருந்துகள் விலை, பருப்பு வகைகள், வீட்டு வாடகை, டீ, காபி பவுண்டர், பைக், கார், துணிகள், ஷாப்பு, போன் ரிச்சார்ச், ஏசி, ஃபிரட்ஜ், சிலிண்டர் விலை, மின்சார கட்டணம், ஆம்னி பேருந்துகள், பள்ளிக் கட்டணம் போன்றவையின் விலை உயர்ந்துள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால் எங்களால் நாங்க வாங்கும் சம்பளத்திற்குள் செலவுகளை அடக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.
இதற்கு மற்றொரு தரப்பில், ”விலையேற்ற பிரச்சனை என்பது இன்றைக்கு நேற்கைக்கு பிரச்சனை அல்ல. 50 ஆண்டுக்கு முன்னாடி ஒரு ரூபாய்க்கு இருந்த பொருள் 50, 100, 1000 என போயிடுச்சு. ஆனா, இதை எப்படி பிளான் பண்ண முடியும் என்றால் வருமானத்திற்குள்ள கொஞ்சமாவது சேமிக்க வேண்டும்" என்றார்.
கொதித்தெழுந்த கோபி:
இதற்கு எதிர்தரப்பில் இருக்கும் பெண் ஒருவர், "100 ரூபாய் வருது என்றால் 105 ரூபாய்க்கு செலவு ஆகுது. மேலும், சின்ன சின்ன மளிகை கடைக்கு இப்போ யாரு வராங்க? எல்லாரும் மொத்த விற்பனை கடை, மாலுக்கு சென்றுதான் அனைத்து பொருட்களை வாங்குறாங்க. இதுல எங்கள மாறி சின்ன கடை நடத்துபவர்களுக்கு எங்கிருந்து வருமானம் வரும். நாங்க எங்க சேமிக்க முடியும்?” என்று ஒரு பெண் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில் ”காய்கறிகள், மளிகை பொருட்களை தவிர பொருட்களின் விலை உயர்ந்திருக்கு. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து தான் இருக்கு. பொதுவா நம்மளை தக்காளி விலை உயர்ந்து இருக்கு என்று பேச வைக்கிறதே ஒரு அரசியல்தான். தக்காளியில சிறுபகுதியின் லாபமாவது விவசாயிகளுக்கு போகுது. ஆனா மற்ற பொருட்களின் காசு எல்லாம் யாருக்கிட்ட போகுது" என்று கொந்தளித்து பேசினார் கோபிநாத்.