இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை தான் முதன்முதலாக சந்தித்த தருணத்தை நீயா நானா தொகுப்பாளரான கோபிநாத் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


நடிகர் அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து விஜயகாந்தை வைத்து ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினிகாந்தை வைத்து தர்பார் என பல படங்களை தமிழில் இயக்கினார்;. அதேசமயம் இந்தியில் ஆமீர்கானை வைத்து கஜினி படத்தை ரீமேக் செய்தார். அப்படம் சூப்பர்ஹிட் அடித்தது. இதற்கிடையில் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தையும் இயக்கினார். 


இப்படியான நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றுகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை வாங்கினார். இதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். 






இந்நிலையில்  ஏ.ஆர்.முருகதாஸை தான் முதன்முதலாக சந்தித்த தருணத்தை நீயா நானா தொகுப்பாளரான கோபிநாத்  பகிர்ந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. அதில், “ரமணா வந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகம் அசோக் நகரில் இருந்தது. நான் ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதனால் நேர்காணலுக்காக முருகதாஸ் அலுவலகத்தில் காத்திருந்தேன். என்னிடம், இப்ப இயக்குநர் வந்துருவாரு.. வந்துருவாரு என சொன்னார்கள். நாங்க ஒரு நியூஸ் சேனல் நிறுவனத்தில் இருப்பதால் எங்களுக்கு நேரம் ஆகிக்கொண்டே செல்கிறது. அப்போது ஒரு பையன் வந்து டிவிஎஸ் 50ல வந்து இறங்குனாங்க.


நான் வெளியில எரிச்சலோட இன்னும் இயக்குநரை காணவில்லை என நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பையன் அங்கு வேலை செய்பவன் என நினைத்து, தம்பி டைரக்டர் வருவாரா மாட்டாரா என கோபத்தோடு கேட்டேன். சாரி வரக்கொஞ்சம் லேட்டாயிச்சுன்னு பதில் வந்துச்சு. அந்த டிவிஎஸ் 50ல வந்து இறங்கிய இயக்குநர் முருகதாஸ் தான் என அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் தெரிவித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.