யாருங்க சொன்னா நாட்டாமைனா ஆலமரத்தடியில் உட்கார்ந்து கையில் சொம்பு வைத்து கொண்டு நியாயத்தை நிலை நாட்டுபவர் என்று. ஏசி ஹால் கலர் காலரா கோட் போட்டு கொண்டும் நியாயம் பேசவும் செய்வார். அவர் தான் நம்ம நீயா நானா கோபிநாத். இன்று இந்த ட்ரெண்டிங் மாடர்ன் நாட்டாமைக்கு 48 வது பிறந்தநாள். 


 



உணர்ச்சிகரமான வார்த்தைகள், கம்பீரமான பேச்சு, ஆழமான தெளிவான கருத்து, உரத்த குரல், மிடுக்கான நடை, நடுநிலையான மனிதர் என தனது ஆளுமையான பேச்சால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர். ரசிகர்கள் அவரை செல்லமாக கோட் கோபிநாத் என்று அழைப்பதுண்டு. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி 17 ஆண்டுகளை கடந்தும் இன்றும் அதன் விழுதுகளை கூட அசைத்து பார்க்க முடியாத வெற்றியோடு நிலைத்து நிற்க செய்யும் ஆணிவேராக இருந்து வருகிறார். அவரை தவிர வேறு ஒருவரையும் அந்த இடத்தில் வைத்து பார்க்க முடியாது. அவரே அந்த நிகழ்ச்சிக்கு தனி சிறப்பு. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்புகள். மனுஷன் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே உள்வாங்கி அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய சிறப்பான விவாதத்தை தொடங்கி வைக்க கூடிய திறமைசாலி. நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் பல தலைப்புகள் சமூகத்துக்கு அவசியம் தேவைப்படும் ஒரு அர்த்தமுள்ள விவாதங்களாகவே இருக்கும். அது தான் அந்த நிகழ்ச்சிக்கு இன்றும் உயிர் ஓட்டத்தை  கொடுத்துள்ளது. 


நீயா நானா கோபி என்றே அடையாளப்படுத்தப்படும் கோபிநாத் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமின்றி சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், ரேடியோ தொகுப்பாளர், நிருபர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், ரியாலிட்டி ஷோ நடுவர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். அவரின் தன்னம்பிக்கையான பேச்சை கேட்கும் போது கேட்போரின் உடலே சிலிர்த்து போகும். பல கல்லூரிகளில் இவர் மேடை பேச்சாளராக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல மாணவர்களின் தன்னம்பிக்கைக்கு விதை போட்டவர். 


 



சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையையும் நிரூபித்த கோபிநாத் 2010ம் ஆண்டு துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த ஒரு மாபெரும் பொக்கிஷமாக அவர் கருதுவது அவரின் அழகு தேவதை வெண்பாவை தான்.   


நீயா நானா நிகழ்ச்சிக்கு முன்னரே இவர் சிகரம் தொட்ட மனிதர்கள், மக்கள் யார் பக்கம், நடந்தது என்ன போன்ற பல சிறப்பாக நிகழ்ச்சிகளை திறம்பட தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தன்னம்பிக்கை டானிக் நீயா நானா கோபிநாத் பிறந்தநாளான இன்று அவரை ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார்கள்.