புரட்சி இயக்குனர் என்கிற அடைமொழியில் இருந்து, விஜய்யின் அப்பா என்கிற பெயர் வந்ததால், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முந்தைய படைப்புகளை இன்றைய தலைமுறை மறந்திருக்கும். தன் கருத்துக்களை அழுத்தமாக கூறும் வெகுசில இயக்குனர்களில் எஸ்.ஏ.சி.,யும் ஒருவர், அதனால் தான் அவர் புரட்சி இயக்குனர் என்று அழைக்கப்பட்டார். 


ராமேஸ்வரத்தில் பிறந்து, சினிமா மோகத்தில் சென்னை வந்து , உதவியாளராகி, உதவி இயக்குனராகி, இயக்குனராகி, தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவின் தந்தையாகிய எஸ்.ஏ.சி,யின் ஆரம்ப கால பயணங்கள், புரட்சி கலைஞர் விஜயகாந்த் உடனே இருந்தது. ஒரே இயக்குனரிடம் 17 படங்கள் நடித்த பெருமையும், எஸ்.ஏ.சி-விஜயகாந்த் கூட்டணிக்கே சேரும். 


புரட்சி இயக்குனர்-புரட்சி கலைஞர் கூட்டணியில் குற்றம் குறைகளை தெறிக்க தெறிக்க பேசிய படங்கள் வேறு எதுவுமே இல்லை. அப்படி, அந்த இருவரின் கூட்டணியில் 1985 செப்டம்பர் 27 இதே நாளில் வெளியானது நீதியின் மறுபக்கம். எஸ்.ஏ.சி.-விஜயகாந்த் கூட்டணியில் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம். அதே போல, இளையராஜாவின் இசையில் இன்றும் கேட்கப்படும் சுவையான பாடல்களை கொண்ட திரைப்படம். 






ராதிகா, வடிவுக்கரசி, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம், 2 மணி நேரம் 1 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாகும். அத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‛மாலைக்கருக்கலில்...’ பாடல், கேட்க கேட்க இனிமையானது. விவி கிரியேஷன்ஸ் சார்பில், ஷோபா சந்திரசேகர் தயாரித்த இத்திரைப்படம், ரசிகர்களாலும் திரைபிரபலங்களாலும் பாராட்டு பெற்றது. 


நீதியின் மறுபக்கம் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்திருந்தார். இதோ அந்த பேட்டி...






"அப்போது ராதிகா, விஜயகாந்த் நடித்த 'நீதியின் மறுபக்கம்' திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்தோம். எப்போதும் ஷூட்டிங்கின் போது பகல் நேரத்தில் அவர்களை பயங்கரமாக வேலை வாங்கிக்கொண்டிருப்பேன், திட்டிக்கொண்டிருப்பேன். ஏன்னா 81ல இயக்குனர் ஆகுறேன், 90ல 55 படம் இயக்கிவிட்டேன். சராசரியாக வருடத்திற்கு 5,6 படங்கள் இயக்குவேன், அதற்கெல்லாம் காரணம் இவங்கதான். இவங்கள அப்படி வேலை வாங்கித்தான் அவ்வளவு படங்கள் சாத்தியம் ஆனது. அப்படி இருக்கும்போது சாயும்காலம் ஆனால் கொஞ்சம் ஜாலியா இருப்போம். ஜாலின்னா நீங்க புரிஞ்சிக்கணும்…(மது பார்ட்டி) அப்போ விஜயகாந்த் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கலாட்டா பண்ணுவாரு. ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் உள்ள ஒரு வாழ்க்கை எங்களுக்கெல்லாம் ரொம்ப ஜாலியா இருக்கும். இதுல செந்தில(உதவி இயக்குனர்) ரொம்ப திட்டுவேன், அதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு, அன்னைக்கு இரவு கொஞ்சம் அதிகமா போயிடுச்சு… அதிகமானதும் விஜயகாந்த் அவரிடம் கேட்கிறார், 'எப்புட்றா இவர்ட்ட வேலை செய்யுற?'ன்னு… அப்போது செந்தில் என்னை திட்ட ஆரம்பிக்கிறார், அதில் இல்லாத கெட்டவார்த்தை இல்லை. 'அவன் கெடக்குறான் ஒருத்தன்… ஒருநாள் நான் டைரக்டர் ஆகி, அவன அசிஸ்டண்டா வச்சு நான் வங்குறேன்டா வேலை' ன்னு என்னென்னமோ வார்த்தைகள் எல்லாம் பேசுகிறார். அந்த வார்த்தைகள் எல்லாம் சொல்ல கூடாது, சென்சார் ஆகிடும்… அவர் அப்போது பேசியதை எல்லாம் சிறிய விடியோ கேமரா வைத்து விடியோ எடுத்துவிட்டோம். அடுத்தநாள் ஷூட்டிங், மானிட்டர் வருது, விஜயகாந்த் என்ன பண்ராருன்னா, அந்த மானிட்டர்ல முன்னாடி நாள் எடுத்த கேசட்ட போட்றாரு. போட்டுட்டு, செந்தில் இங்க வா, இப்படிதான் இந்த பாட்டு ஷூட் பண்ண போறோம், இத பாத்துக்கன்னு கூப்புடறாரு. அவர் வந்ததும் எல்லாரும் சேர்ந்து அவர் தோளை பிடிச்சு அழுத்தி உக்கார வைக்குறோம். உக்கார வச்சா விடியோ ஆரம்பிக்குது, செந்தில் அய்யோ அய்யோ ன்னு கத்துறார். அப்படி ஒரு நட்பு முறையில் தான் நாங்கள் பழகினோம், அப்படிதான் இவ்வளவு திரைப்படங்கள் செய்தோம். அவர் மீது கோபம் எதுவும் வரவில்லை, அது அந்த மூட்ல பேசுனது அவ்வளவுதான்"