தனது அடுத்தப் படமாக ’மண்ணாங்கட்டி’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா
நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சரத்குமார் நடித்த ஐயாப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய நயன்தாரா தமிழில் மட்டுமில்லாமல் தற்போது ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். ஜவான் படத்தில் ஷாருக் கானுடன் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி அனைவராலும் பாராட்டுக்களைப் பெற்றது. பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது சோலோவாகவும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அறம், மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், கோலமாவு கோகிலா உள்ளிட்டப் படங்களில் நடித்த நயந்தாரா தற்போது மீண்டும் ஒரு முறை சோலோவாக களமிறங்க இருக்கும் படம்தான் மண்ணாங்கட்டி.
மண்ணாங்கட்டி
பிரபல யூடியூப் சானலில் புகழ்பெற்றவரான டூட் விக்கியின் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இன்று விநாயகர் சதுர்த்தியன்று இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நயன்தாரா. கோலமாவு கோகிலா படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மீண்டும் ஒரு முறை யோகி பாபு மற்றும் நயன்தாரா கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி ராஜசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த போஸ்டரில் ஒன்றிய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறக்க அவற்றுக்கு அருகில் பழைய செல்லாத 10, 20 காசு நாணையங்கள் கிடக்கின்றன. இந்த போஸ்டரை வைத்து அரசியல் விமர்சனம் செய்யும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்பது தெரியவருகிறது.
டூட் விக்கி
விக்கி லீக்ஸ், வெல்லும் சொல், சாட்டை போன்ற யூடியூப் நிகழ்ச்சிகளில் பரவலாக அறியப்பட்டவர் விக்கி. இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் கன்ஸல்டன்சி சர்வீஸ் என்கிற இணையத் தொடரை இயக்கிய விக்கி சமூக வலைதளத்தில் அதிகம் கவனிக்கப்படும் பிரபலங்களில் ஒருவராக மாறினார். தமிழகத்தின் பிரபலமான யூடியூப் சானலான ப்ளாக் ஷீப்பில் இணைந்தார் விக்கி. இந்த சானலில் வெளிவந்த பல்வேறு ட்ரெண்டான நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் விக்கி. கல்லூரி சாலை, ஆண்டி இண்டியன்ஸ் ஜாக்கிரதை ஆகிய இவர் கதை எழுதிய நிகழ்ச்சிகள் அதிகம் பரவலாக பார்க்கப்பட்டன.
கடந்த 2020 ஆம் ஆண்டு சொந்தமாக யூடியூப் சானல் ஒன்றைத் தொடங்கினார் விக்கி. இந்த சானலுக்கு டூட் விக்கி என்று பெயர் வைத்தார். இந்த சானலில் இவர் வெளியிட்ட ட்ரோல் வீடியோக்கள் பல ,சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கின்றன. தற்போது தனது முதல் படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபுவை இயக்க இருக்கிறார் விக்கி.
மேலும் படிக்க : Latest Gold Silver: நல்ல நாள்ல தங்கம் வாங்க போறீங்களா? ஆபரண தங்கம் ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய விலை நிலவரம் இதோ..