தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நானும் ரௌடிதான் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுகையில் அது வைரலாவது வழக்கம்.
அதுமட்டுமின்றி, விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்திருக்கும் பெயர் ரவுடி பிக்சர்ஸ். அதற்கு காரணம் இவர்கள் இருவரும் காதலில் இணைவதற்கு காரணமான படம் நானும் ரௌடிதான்.
இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான 'கூழாங்கல்' படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அப்படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
இப்படம் நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருதை பெற்றது. இந்த விழாவுக்கு இருவரும் பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் புடவையில் சென்றிருந்தனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது.
முன்னதாக கூழாங்கல் படத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தது நயன் தாராதான் என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அதுகுறித்து அவர், “வினோத்ராஜ் தன் வாழ்க்கையில் பார்த்ததை வைத்து படம் இயக்கினார்.ர். அந்த படம் சுமார் 30 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் இம்பிரஸ் ஆனார்கள். ரோட்டர்டாமில் வெற்றி பெற்றுவிட்டதால் பிற விழாக்களில் போட்டியில் இல்லை. ஆனால் படத்தை பார்த்த நடுவர்கள் அனைவரும் அதை பாராட்டி பேசியிருக்கிறார்கள். கூழாங்கல் படம் முடிக்கப்படாமல் இருந்த நிலையில் தயாரிப்பாளர் தேவை என்று இயக்குநர் ராம் சார் தான் எங்களிடம் கூறினார். அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை நானும், நயனும் பார்த்தோம். இந்த படத்தை நாம் தயாரிப்போம் என்று முடிவு செய்தது நயன்தான். படத்தை முடித்த பிறகு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விண்ணப்பித்தோம். அங்கு எங்கள் படத்திற்கு விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அந்த படத்திற்கு டைகர் விருது கிடைத்தது. நாங்கள் தயாரித்த முதல் படமே ஆஸ்கருக்கு செல்வது சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் படத்தை யார் பார்த்தாலும் அவர்களுக்கு பிடித்துவிடும். மணிரத்னம், வெற்றிமாறன் என்று பல இயக்குநர்களுக்கும் பிடித்திருக்கிறது என்றார்.