சரத்குமார் நடிப்பில் வெளியான அய்யா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சிம்பு, ஜெயம்ரவி, தனுஷ் என தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகின் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நயன்தாரா ஏராளமான படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகிலும் நம்பர் 1 நடிகையாகவே வலம் வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா வெளிப்படையாக அறிவித்தார்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் இன்று காலையில் நடிகை நயன்தாராவும், அவரது வருங்கால கணவருமான விக்னேஷ் சிவனும் சுவாமி தரிசனம் செய்தனர். விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவும் இணைந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு ஆலயத்தை சுற்றி வந்து தரிசனம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில், இருவரும் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
நயன்தாரவும், விக்னேஷ் சிவனும் தரிசனம் முடிந்து ஆலயத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கிருந்த முதியவர் ஒருவர் நயன்தாராவை கண்டு ஆச்சரியத்தில் நயன்தாராவை நோக்கி ஓடிவந்தார். பின்னர், ஒரே ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்கவும், நயன்தாராவும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் அந்த முதியவர் நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதனால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய்சேதுபதி ஆகியோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இருவரும் இணைந்து தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவ்வப்போது வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் ஒன்றாக செல்வது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியான நிலையில், நயன்தாரா தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை உறுதிசெய்தார். இதனால், இருவருக்கும் இடையே எப்போது திருமணம் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.