தமிழ், தெலுங்கு, மலையாளம் என படு பிஸியாக நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. இளம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இவருக்குமான காதல் ரசிகர்கள் அறிந்ததே. கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் “நானும் ரௌடிதான்” . இந்த படத்திலிருந்துதான் இருவருக்குமான காதல் துவங்கியதாக கூறப்படுகிறது. நயன்தாரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் இதற்கு நேர்மறையானவர். தனது அப்டேட் மட்டுமல்லாமல் நயன்தாரா குறித்த செய்திகளையும் சேர்த்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாராவின் தந்தையான குரியன் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வின் காரணமாக உடல் மோசமான நிலையில் இருந்துள்ளார் குரியன். கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.இது நயன்தாரா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களை கலக்கமடைய செய்துள்ளது. நயன்தாரா மற்றும் அவரது தாயார் உடனிருந்து அவரை கவனித்து வருகின்றனராம். குரியன் அவர்கள் கோடியாட்டு இந்திய விமானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது தனது மனைவியுடன் கேரளாவின் கொச்சினில் வசித்து வருகிறார்.நயன்தாராவின் திருமணத்தை காண வேண்டும் என்பதே குரியனின் நீண்ட நாள் ஆசை என கூறப்படுகிறது. அவ்வபோது தந்தையை காண கொச்சின் செல்லும் நயன்தாராவிடம் தனது ஆசையை தெரிவித்த வண்ணம் இருப்பாராம் அவரது தந்தை. ஆனால் நயன்தாரா தற்போது வேண்டாம் என மறுத்துவிடுவாராம். இந்நிலையில் இறுதியாக தந்தையை காண காதலன் விக்னேஷ் சிவனுனுடன் கடந்த மே மாதம் கொச்சின் சென்றார் நயன்தாரா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த பயணத்தின் போது தனது காதலுக்கு தந்தை பச்சைக்கொடி காட்டியதால், திருமணத்திற்கும் ஓக்கே சொல்லிவிட்டாராம் நயன்தாரா.
இதற்கிடையில் விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் “திருமணம் எப்போது” என கேள்வி கேட்டக, அதற்கு பதிலளித்த அவர் “ கொரோனா முடிவுக்குத்தான் வெயிட்டிங் ப்ரோ, பணம் நிறைய செலவாகும் அதனால காசு சேர்த்துட்டு இருக்கோம்” என பதிலளித்தார். இதன் மூலம் இவர்கள் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவது உறுதியானது. இந்நிலையில் நயன்தாரா தந்தை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் மிகுந்த வேதனையில் உள்ளாராம் நயன்தாரா. தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதால் திருமண வேலைகளை விரைந்து தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா தந்தை குரியன் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிராத்தனை செய்து வருகின்றனர்.