மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மலையாள திரையுலகிலே அதிக வசூலை குவித்த திரைப்படம் என்ற சாதனையையும் லூசிபர் திரைப்படம் படைத்தது.


இந்த படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் தற்போது உருவாக்கி வருகின்றனர். மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். லூசிபர் படத்தில் மோகன்லாலுக்கு இணையான பெண் கதாபாத்திரத்தில் மஞ்சுவாரியர் நடித்திருப்பார். கதைப்படி மஞ்சுவாரியர் மோகன்லாலுக்கு தங்கையாக நடித்திருப்பார்.




தெலுங்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களை வாயடைக்க வைத்துள்ளது.  


காட்பாதர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிப்பதற்காக நயன்தாராவிற்கு ரூபாய் 4 கோடி அளிக்கப்பட்டுள்ளது. லூசிபர் படத்தில் மஞ்சுவாரியரின் காட்சிகள் மிகவும் குறைவுதான் என்றாலும், கதைக்கு மிகவும் அழுத்தமான காட்சிகளாக உருவாக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்று சிரஞ்சீவி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்காரணமாகவே, நயன்தாராவிற்கு 4 கோடி சம்பளம் அளிக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.




ஐயா என்ற படம் மூலமாக திரையுலகில் அறிமுகமான நயன்தாரா தனது அயராத உழைப்பு மூலமாக தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அறம் பட வெற்றிக்கு பிறகு, கதைத்தேர்வில் மிகுந்த கவனத்துடனே இருந்து வருகிறார். விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த் என்று தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.


நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நயன்தாரா நடித்து வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் வசூலை வாரிக்குவித்ததால் அவர் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடிப்பதற்கே நயன்தாரா, ரூபாய் 5 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




தற்போது தமிழில் அவரது வருங்கால கணவர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், கனெக்ட் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லூசிபர் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் திரைப்படத்தை நடிகர் ஜெயம்ரவியின் சகோதரரும், இயக்குனருமான மோகன்ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண