நடிகை நயன்தாரா தற்போது அட்லி இயக்கியிருக்கும்  ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். அவரது அடுத்தப் படம் குறித்தான தகவலுக்காக ரசிகர்கள் காத்து வரும் சூழலில் பிரபல யூ ட்யூபரான டூட் விக்கி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் நயன்தாரா என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.


மீண்டும் இணையும் கோலமாவு கோகிலா காம்போ


இந்தப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமவு கோகிலா படத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்து அந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்பொது இரண்டாவது முறையாக இணைந்து கலக்க இருக்கிறது இந்த காம்போ. முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தியதாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 14-ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






டூட் விக்கி


 விக்கி லீக்ஸ், வெல்லும் சொல், சாட்டை போன்ற யூடியூப் நிகழ்ச்சிகளில் பரவலாக அறியப்பட்டவர் விக்கி. இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் கன்ஸல்டன்சி சர்வீஸ் என்கிற இணையத் தொடரை இயக்கிய  விக்கி சமூக வலைதளத்தில் அதிகம் கவனிக்கப்படும் பிரபலங்களில் ஒருவராக மாறினார். தமிழகத்தின் பிரபலமான யூடியூப் சானலான ப்ளாக் ஷீப்பில் இணைந்தார் விக்கி. இந்த சானலில் வெளிவந்த பல்வேறு ட்ரெண்டான நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் விக்கி. கல்லூரி சாலை, ஆண்டி இண்டியன்ஸ் ஜாக்கிரதை ஆகிய இவர் கதை எழுதிய நிகழ்ச்சிகள் அதிகம் பரவலாக பார்க்கப்பட்டன.


 கடந்த 2020 ஆம் ஆண்டு சொந்தமாக யூடியூப் சானல் ஒன்றைத் தொடங்கினார் விக்கி. இந்த சானலுக்கு டூட் விக்கி என்று பெயர் வைத்தார். இந்த சானலில் இவர்  வெளியிட்ட ட்ரோல் வீடியோக்கள் பல ,சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கின்றன. தற்போது தனது முதல் படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபுவை இயக்க இருக்கிறார் விக்கி.