தமிழ் சினிமாவிற்காக அண்டை மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும், நாயகிகளை அறிமுகப்படுத்துவது என்பது சாதாரணமான நிகழ்வுதான். அந்த வகையில் பல நாயகிகள் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து இருந்தாலும், அவர்கள் எல்லாருக்கும் ஒரு படி மேலே சென்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்து இருப்பவர்தான் , நயன்தாரா. டையானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்ட நயன்தாராவின் தந்தை, ஒரு விமானப்படை அதிகாரி.


கேரளாவை சேர்ந்த இவர் ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி 20 ஆண்டுகளை எட்ட உள்ளார். அதோடு, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து தமிழ்நாட்டின் மருமகளாக மாறிய நயன்தாரா, இன்று (நவ.18) தனது இரட்டை குழந்தைகள் உடன் 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதுநாள் வரையில் தமிழ்திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, கோடிகளில் சம்பளம் பெற்று பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.


தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துவரும், நயன்தாராவின் ஒரு படத்திற்கான சம்பளம் ரூ.10 கோடி என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முந்தைய கால நாயகிகள் போன்று அல்லாமல், தற்போதைய நாயககிகள் சம்பாதிக்கும் பணத்தை, பல்வேறு துறைகளில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி வருகின்றனர். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நயன்தாரா திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் படங்கள், விளம்பரங்களுக்கான தனது சம்பளம், வீடுகள் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம், நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.165 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.




தனி விமானத்தில் நயன்தாரா (courtesy: gulte)


குறிப்பாக, நயன்தாராவுக்கு பல அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில், ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளின் மதிப்பு மட்டும் ரூ.15 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. 4BHK வசதியுடன் சென்னை மற்றும் கேரளாவில் இரண்டு வீடுகளை கொண்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சென்னையில் இருந்து கொச்சி மற்றும் ஐதராபாத் செல்வதற்காக தனி விமானம் ஒன்றையும் நயன்தாரா வைத்துள்ளார். மேலும் ரூ.88 லட்சம் மதிப்பிலான Mercedes GLS 350D, ரூ.74.5 லட்சம் மதிப்பிலான BMW 5 series, சுமார் ரூ.1.76 கோடி மதிப்பிலான பிஎம்டபிஎள்யூ 7 சீரிஸ் ஆகியவற்றுடன், டொயோட்டா இனோவா கிரிஸ்டா, ஃபோர்ட் என்டீவர் உள்ளிட்ட கார்களையும் நயன்தாரா பயன்படுத்தி  வருகிறார்.


இதனிடையே, தனிஷ்க், டாடா ஸ்கை, கே பியூட்டி மற்றும் உஜாலா போன்ற நிறுவனங்களின் விளம்பர படங்கள் மூலமும் நயன்தாரா பெரும் வருமானம் ஈட்டி வருகிறார். தி லிப் பாம் கம்பெனியிலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.5 கோடி வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. உணவகம் மற்றும் எண்ணெய் நிறுவனத்திலும் நயன்தாரா பெரும் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.