நடிகை நயன்தாராவும் மாதவனும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


புது காம்போ


நடிகை நயன்தாரா கோலிவுட் தாண்டி பாலிவுட்டில் ஜவான் திரைப்படம் மூலம் கால் பதிக்க உள்ளார். அதே சமயம்  கோலிவுட்டில் அவர் இறுதியாக நடித்த அமானுஷ்ய திரைப்படமான கனெக்ட் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் நயன்தாராவின் 75ஆவது படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி கடந்த சில நாள்களாக இணையத்தில் ட்ரெண்டாகி வந்தன.


அதன்படி நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நயன்தாரா ராஜா ராணி படத்துக்குப் பிறகு நடிகர் ஜெய்யுடன் மீண்டும் இணைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனிடையே ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்து முடித்துள்ள இறைவன் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. ஜவான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.


நயன் - மாதவன் - சித்தார்த்


இந்நிலையில், நயன்தாரா அடுத்ததாக நடிகர் மாதவனுடன் முதன்முறையாக இணைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிரபல தயாரிப்பாளரான சஷிகாந்த இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவதாகவும் இந்தப் படத்தி நடிகர் சித்தார்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைந்திருக்கும் என்றும், த டெஸ்ட் என இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மீண்டும் இணையும் மாதவன் - சித்தார்த்


நடிகர் மாதவன் இறுதியாக ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்தப் படம் விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. மற்றொருபுறம் நடிகர் சித்தார்த் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார்.


இந்தியில் 2006ஆம் ஆண்டு வெளியான ரங் தே பசந்தி படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது 17 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.


மேலும் நயன்தாரா - மாதவன் - சித்தார்த் மூவருமே இதற்கு முன் இணைந்து நடித்திராத நிலையில் இவர்கள் முதன்முறையாக கூட்டணி சேரும் இந்தப் படம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.


பிஸியாக இருக்கும் நயன்


நடிகை நயன்தாரா முன்னதாக மலையாளத்தில் கோல்ட், தெலுங்கில் காட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்து பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.


மேலும்  சென்ற ஆண்டு ஜூன் மாதம் தன் நெடுநாள் நண்பர், காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட் ஆகிய மூன்று தமிழ் படங்களில் நடித்திருந்தார்.


முன்னதாக வாடகைத் தாய் மூலம் இரு குழந்தைகளுக்குத் தயான நயன்தாரா ஷாருக்கான் உடன் நடித்து வரும் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் கோலோச்ச ரெடியாகி வருகிறார்.