தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரகளுடன் நடித்து வந்த நயன்தாரா ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு  2013 ஆம் ஆண்டு வெளியான  “ராஜா ராணி” படம் மூலமாக கம்-பேக் படமாக கொடுத்தார். அதன் பின்னர் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வரும் கதைகளை தேர்வு செய்து நடித்த அவர், மாயா, டோரா, அறம், அய்ரா, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல  படங்களில் நடித்தார். அவரின் படங்களுக்கு கதாநாயகர்களுக்கு வருவது போல ரசிகர் கூட்டம் அலைமோத அவருக்கு “லேடி சூப்பர்ஸ்டார் நயன்” என்ற பட்டமும் வந்து சேர்ந்தது. 


இதனிடையே தனது நீண்ட நாள் காதலாரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதத்தில்  மணந்து கொண்ட நயன், இனிமேல் படம் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழ், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் ரவுண்டு கட்டி படங்களில் நடித்து வருகிறார் நயன்.  






அந்த வகையில் தற்போது மாயா இயக்குநர் அஸ்வின் சரவணனுடன் மீண்டும் சேர்ந்து கனெக்ட் என்ற 99 நிமிடம் ஓடக்கூடிய பேய் படத்தில் நடித்துள்ளார், இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதியும், ஹிந்தியில் டிசம்பர் 30 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பேய் பிடித்த குழந்தையின் அம்மாவாக அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார் நயன். 


அவரிடம் பல கேள்விகளை கேட்ட தொகுப்பாளர் டிடி நீலகண்டன், கல்யாணம் ஆன பிறகு குழந்தை வந்த பிறகு, ஏன் நடிகைகளின் மீது இந்த சமூகம் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறதே? என்ற கேள்வியை முன்வைத்தார். 


அதற்கு பதிலளித்த நயன், “ ஏன், இப்படி எனக்கும் புரியவில்லை... இதை ஒரு கேள்வியாக கேட்பதற்கு, இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. கல்யாணம் முடிந்த பின் வழக்கம் போல, அந்த கணவன் வேலைக்கு சென்றுவிடுவான். ஆனால், பெண்களுக்கு அது வாழ்க்கையின் இடைவேளையாக கருதப்படுகிறது.


கல்யாணம் என்பது, அப்படிப்பட்ட விஷயம் அல்ல. திருமணத்திற்கு பின் உங்கள் வாழ்க்கை முழுமை அடைகிறது. அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மென்மேலும் உயரவேண்டிய என்ற எண்ணமும் வருகிறது. ஆண்கள், பொறுப்பாளராக மாறிவிட வேண்டும் என்பதும், பெண்கள்.. போதும் போதும் நீ வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்பது போன்ற சூழல் இருக்கிறது.


                           


என் மனநிலையிலும், என்னிலும், என்னை சுற்றியுள்ளவர்களிடமும் எந்தவொரு மாற்றமும் இல்லை. மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. எனக்கு அப்படிதான் இருக்கிறது. மற்றவர்களுக்கும் இது போன்ற மனநிலை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


எனக்கு நிச்சயம் முடிந்த பின்னரும், திருமணம் முடிந்த பின்னரும் என் வாழ்க்கையில், நான் இன்னும் சாதிக்க முடியும் என்ற எண்ணமே வருகிறது. இது ஒரு அழகான மனநிலை. திருமணத்தில் இரு இதயங்களும் இரு ஆத்மாக்களும் ஒன்றினைக்கிறது. இதை ஒரு புதிய அத்தியாத்தின் தொடக்கமாக நினைத்தால் வாழ்க்கை இன்னும் கூட அழகானதாய் மாறிவிடும்" என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.