தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நயன்தாரா ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு வெளியான “ராஜா ராணி” படம் மூலமாக கம்-பேக் படமாக கொடுத்தார். அதன் பின்னர் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வரும் கதைகளை தேர்வு செய்து நடித்த அவர், மாயா, டோரா, அறம், அய்ரா, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவரின் படங்களுக்கு கதாநாயகர்களுக்கு வருவது போல ரசிகர் கூட்டம் அலைமோத அவருக்கு “லேடி சூப்பர்ஸ்டார் நயன்” என்ற பட்டமும் வந்து சேர்ந்தது.
இதனிடையே தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதத்தில் மணந்து கொண்ட நயன், இனிமேல் படம் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழ், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் ரவுண்டு கட்டி படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மாயா இயக்குநர் அஸ்வின் சரவணனுடன் மீண்டும் சேர்ந்து கனெக்ட் என்ற 99 நிமிடம் ஓடக்கூடிய பேய் படத்தில் நடித்துள்ளார், இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதியும், ஹிந்தியில் டிசம்பர் 30 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.
99 நிமிடம் ஓடக்கூடிய இப்படத்தில் பேய் பிடித்த குழந்தையின் அம்மாவாக அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நயன் முந்தைய காலத்தில் கடந்து வந்த கஷ்டங்களையும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களை பற்றியும் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “என்னுடைய ஒரு சில கனவுகள் நிறைவேறிவிட்டது. இன்னும் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், ஒரு அளவுக்கு நான் செய்துவிட்டேன் என்று தோன்றுகிறது.
என்னுடைய இருபதுகளில், பல ஆசைகள் இருந்தன; பெண்களை மையமாக கொண்ட படங்கள் அப்போது இல்லை. அந்த சமயத்தில், ஏன் ஹீரோயின்களுக்கு முறையான இடம் கொடுக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்றால், ஏதோ ஒரு ஓரத்தில் நிற்க வைத்து விடுவார்கள். அதனால்தான் நான் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் செல்வது இல்லை. மரியாதை கொடுக்கப்படும் நிலையை நாம் அடைந்துவிட்டால், அங்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தேன்.
இப்போது, பெண்களை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகிவுள்ளது, இயக்கப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர்களும் அது போன்ற கதையை தயாரிக்க முன்வந்து நிற்கின்றனர்.நான் இதுபோன்ற கதைகளை தேர்வு செய்துதான் நடிக்கிறேன்.
அப்போது பெண்களை வைத்து எடுக்கப்படும் படத்தை தயாரிக்க ஆட்கள் இல்லை. அப்படி எடுக்கும் படங்கள் ஓடுமா என்ற கேள்வியும் இருந்தது; படத்தை தயாரிக்கும், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதும் முக்கியமான விஷயம்.
இந்த சூழல் இப்போது மாறியுள்ளது; தயாரிப்பாளர்கள் முன்வருவதால், இயக்குனர்களும் அதற்கு ஏற்ற கதையை எழுதுகின்றனர். பெண்களை மையமாக கொண்ட படத்திற்கு கொஞ்சமான பட்ஜெட்தான் ஒதுக்கப்படும். ஹீரோக்களின் படம் கோடி கோடியாக வசூல் செய்து வரும் நிலையில், ஏன் பெண்கள் இது போன்ற பெரிய கமர்ஷியல் படத்தில் நடிக்கக்கூடாது என்ற எண்ணம் வருகிறது. சிறு சிறு படங்களில் நடித்து வருகிறேன். விரைவில், நான் பெரிய அளவில் பெண்களை மையமாக கொண்ட படத்தில் நடிப்பேன். அதற்கு முயற்சி செய்வேன்..செய்கிறேன்.” என தன் கருத்துக்களை வெளிப்படுத்தினார்