தமிழ் சினிமாவின் தற்போதைய நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில், பலரும் அதன் அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, காதல் ஜோடி இருவரும் தங்கள் திருமண நிகழ்ச்சியின் வீடியோ உரிமத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்குப் பெரிய தொகை ஒன்றிற்கு விற்பனை செய்துள்ளனர். 

Continues below advertisement

மேலும், மொத்த திருமண நிகழ்ச்சியையும் ஆவணப் பட வடிவில் பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படப்பிடிப்பு நடத்தவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், இந்தத் திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சூர்யா முதலான பல்வேறு முன்னணி நடிகர்களும், திரைப் பிரபலங்களும் கலந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது. 

Continues below advertisement

சமீபத்தில், தனது திருமண நாள் தொடர்பான தகவல்களை செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மேலும், தனது காதல் பயணத்தில் ஊடகங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது திரைப்பயணத்திலும் ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி கூறியுள்ளார். 

வரும் ஜூன் 9 அன்று, மகாபலிபுரத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், அதனைத் தொடர்ந்து சென்னையில் நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

திருமண அழைப்பிதழ் வழங்கும் பணிகளை இருவரும் மேற்கொண்டு வரும் நிலையில், நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்தப் படங்கள் இணையத்தில் வெளியானது முதல் வைரலாகி வருகின்றன. 

கடந்த 2015ஆம் ஆண்டு, நடிகை நயன்தாராவுடன் `நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் மூலமாக இணைந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அப்போது இருந்து இருவரும் காதலித்து வருகின்றனர்.