நட்சத்திர ஜோடி..


தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் முடிந்தது. மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு கண்ணாடி விடுதியில், முக்கிய பிரபலங்கள் மட்டும் பங்கேற்க நடந்த திருமணத்தை, இந்தியாவே கொண்டாடியது. ட்ரெண்டிங் வரை இடம் பிடித்த நயன்-சிவன் திருமணம், மறுநாளே சர்ச்சையிலும் சிக்கியது. தமிழ்நாட்டில் திருமணம் முடிந்த கையோடு, ஆந்திர மாநிலம் திருப்பதி சென்ற நயன்-சிவன் தம்பதி, அங்கு ஏழுமலையானை தரிசித்து வழிபாடு நடத்தினர். 


அதன் பின் கோயில் வெளியே, அவர்கள் நடத்திய போட்டோ ஷூட் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. காலணி அணிய தடைவிதிக்கப்பட்ட இடத்தில், நயன்தாரா காலணி அணிந்து போட்டோஷூட் நடத்தியதை பலரும் விமர்சனம் செய்தனர். அது தொடர்பாக, போலீசில் புகார் அளிக்கப்படும் என கோயில் நிர்வாகிககள் கூட கருத்து தெரிவித்திருந்தனர். ஆன்மீகவாதியான விக்னேஷ் சிவன் இது குறித்து அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.


 






மாமியார் வீட்டு விருந்து..


ஆன்மிகப்பயணத்துக்குப் பின் மீண்டும் சென்னை திரும்பி தம்பதி, தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர். சனிக்கிழமை அன்று நடந்த அந்த சந்திப்பில், தங்களுக்கு என்றும் ஊடக ஆதரவு வேண்டும் என இருவரும் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் அடுத்ததாக மாமியார் ஊரான கேரளாவிற்கு, அதாவது நயன்தாரா வீட்டிற்கு நேற்று புறப்பட்டது புதுமணத் தம்பதி. அங்கு மாமியார் வீட்டில் விக்னேஷ் சிவனுக்கு தடபுடல் விருந்து அளிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், பூங்கொத்து கொடுத்து வரவேற்பு உள்ளிட்ட மாப்பிள்ளை தாங்கும் படலம் தொடங்கியது. 




தேவி கோயில்..


வீட்டில் விருந்து வைத்தது போதாது என்று, கொச்சியில் உள்ள தனியார் விடுதியிலும் அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் வெறும் விருந்துக்காக மட்டுமே செல்லாமல் ஆன்மீக பயணமாக கேரள ட்ரிப்பை மாற்றியுள்ளனர். கேரளாவின் புகழ்பெற்ற செட்டிங்குளங்கர தேவி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர் விக்கி - நயன் தம்பதி. கோயிலுக்கு வருகைதந்த புதுமணத்தம்பதிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஆலயத்தின் புகைப்படம் பரிசாக கொடுக்கப்பட்டது.