தருமபுரி அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்க்க ஆர்வத்துடன் வந்த பெற்றோர், குழந்தைகளை ஆசிரியர்கள் பூ கொடுத்து வரவேற்றனர்.

 

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள உம்மியம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தனியார்  பள்ளிக்கு இணையாக தொடுதிரை வகுப்பறை, விளையாட்டு உபகரணம், பள்ளியின் சுற்றுப்புறம், கணினி, சீருடை உள்ளிட்ட வசதிகளை ஆசியர்கள் செய்துள்ளனர். இதனால் ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடங்களில் மாணவர் சேர்க்கைக்கு இடமில்லை என்று பள்ளியில் அறிவிப்புப் பலகையை வைக்கும் அளவிற்கு மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இதற்கு இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளூர் பொதுமக்களின் ஒத்துழைப்பால் இந்த அளவிற்கு மாணவர் சேர்க்கையும் ஆசிரியர்களின் செயல்பாடும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவர்கள் உற்சாகத்துடன் வந்திருந்தனர்.



 

தொடர்ந்து  இன்று முதல்  மாணவர்களை பள்ளியில் சேர்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். இதில் பள்ளி வகுப்புகள் தொடங்கிய நேரம் முதலே மாணவர் சேர்க்கையும் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து,  ஆர்வத்தூடன் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். மேலும் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஏராளமான பெற்றோர்களும், குழந்தைகளும் வந்திருந்தனர். இதனால் பள்ளிக்கு வந்தவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் நரசிம்மன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பூக்கள் கொடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளிக்கு வரவேற்றனர். தொடர்ந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில், இன்று சேர்க்கை தொடங்கிய உடனே 40 க்கும் மேற்பட்ட மாணவர்களை புதியதாக சேர்த்துள்ளனர். இன்னும் சில நாட்கள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது, இடமில்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்திலேயே ஆண்டுதோறும் அரசு பள்ளியில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெறும் பள்ளி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.