வாடகைத்தாய் பிரச்சனையில் சிக்கியுள்ள நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படம் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. கிட்டதட்ட 7 ஆண்டுகளாக காதலித்து கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வந்த இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மிக முக்கிய குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இவர்கள் ஹனி மூன் சென்று பகிர்ந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பின்னர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்கள் திரையுலக பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். இதனிடையே திருமணம் நடந்து சரியாக 4 மாதங்கள் கழித்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளம் மூலமாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.
இது ஒருபுறம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தாலும், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தாலும் மறுபுறம் அது எப்படி சாத்தியம் என்ற பேச்சுக்களே இணையம் முழுவதும் பரவிக்கிடந்தது. ஆனால் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்ததாக தகவல் வெளியான நிலையில் அதுவும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்ட முறைகளை பயன்படுத்தி தான் வாடகைத்தாய் ஏற்பாடு செய்தார்களா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழ, இதுதொடர்பாக விசாரணை நடத்த சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் தரப்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்துக்கொண்டதற்கும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறி அதற்கான ஆதாரங்களை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பித்ததாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் வாடகைத்தாய் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.