நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மனைவி அலியா அவர் மீது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 


அலியாவின் அடுக்கடுக்கான புகார்களை நவாசுதீன் மறுத்து பரபரப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது நவாசுதீன் ஒரு ‘பொறுப்பற்ற தந்தை’ என்று அலியா குறிப்பிட்டு தன் சார்பில் அறிக்கை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


நவாசுதீனின் மேலாளர் தங்கள் மகளை பல முறை 'தகாத முறையில்' கட்டிப்பிடித்ததாகக் கூறியுள்ளார்.


"உண்மை என்னவென்றால், ஒரு பொறுப்பற்ற தந்தையாக, 'நீங்கள் எனது மைனர் மகளை உங்கள் ஆண் மேலாளருடன் வேறு நாட்டுக்கு அனுப்பி, எனக்கு தெரியாமலும், சம்மதம் இல்லாமலும் ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்தீர்கள். உங்கள் ஆண் மேலாளர் இந்தக் காலக்கட்டத்தில் எனது மைனர் மகளை தகாத முறையில் பலமுறை கட்டிப்பிடித்தார், அவள் எதிர்ப்புகளை மீறி இவை அனைத்தும் செய்யப்பட்டன. நானோ நீங்களோ இல்லாதபோது உங்கள் மேலாளர் இதனை செய்துள்ளார் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.





"நீங்கள் இன்னும் அவரை கண்மூடித்தனமாக நம்புவதாகக் கூறினீர்கள். என் மகளைப் பெற்ற தாயாக நான் என்ன நடந்தது என்பதை எதிர்த்தபோது ​எங்களை அச்சுறுத்தினீர்கள்" என்று ஆலியா  கூறியுள்ளார். 


மேலும் தன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தன்னிடம் பல ஆதாரங்கள் இருப்பதாகவும் அலியா கூறியுள்ளார்.


பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்கும் அவரது மனைவி ஆலியாவும் சட்டரீதியாக விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகின்றனர். தன் தனித்துவ நடிப்பால் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவரும் பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து கோலிவுட் ரசிகர்களை ஈர்த்தவருமானவர் நடிகர் நவாசுதீன் சித்திக்.


ஆனால் தன் தனிப்பட்ட வாழ்வில் நவாசுதீன் கடந்த ஓராண்டாக தொடர் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். சென்ற 2010ஆம் ஆண்டு நவாசுதீன் ஜைனப் எனும் ஆலியா அஞ்சனாவை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.


இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும்  ஆண் குழந்தையும் உள்ள நிலையில், 2020ஆம் ஆண்டு நவாசுதீன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அலியா முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து நவாசுதீன் - அலியா இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியதுடன் இருவரும் சட்டரீதியாக விவாகரத்து வழக்கை எதிர்கொள்ளத் தொடங்கினர்.


முன்னதாக நவாசுதீன் தன்னை மதம் மாற்றினார், பாலியல் வன்கொடுமை செய்தார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து பாலிவுட் வட்டாரத்தை அலியா அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.


தொடர்ந்து சென்ற ஆண்டு தன் குழந்தைகளுடன் துபாய் சென்று குடியேறிய அலியா, சென்ற மாதம் மீண்டும் இந்தியா திரும்பியது முதல் மீண்டும் இவர்களுக்குள் பிரச்னைகள் பூதாகரமாகத் தொடங்கின.


அலியா தங்கள் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக நவாசுதீனின் தாயும், நவாசுதீன் தன் குழந்தையை ஏற்க மறுப்பதாக அலியாவும் மாறி மாறி புகார் தெரிவித்தனர். இதன் உச்சக்கட்டமாக நவாசுதீன் தன் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே காக்க வைத்ததாக முன்னதாக அலியா வீடியோ பகிர்ந்து அதிர்க்குள்ளாக்கினார்.


இந்நிலையில் தன் மீதான அடுக்கடுக்கான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்காமல் அமைதி காத்து வந்த நவாசுதீன் முன்னதாக மௌனம் கலைந்து பதிலளித்தார்.


அதில் தன் மௌனத்தால் தான் கெட்டவனாக்கப்படுவதாகவும், தான் என்றோ அலியாவுடன் விவாகரத்து செய்துவிட்டதாகவும், தன் குழந்தைகளுக்காக கொடுத்த காரை அலியா விற்றதாகவும், பணத்தை அவர் அதிகம் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.