அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அந்த பொதுக்குழு எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனை தொடர்ந்து நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக தோல்வியடைந்தது.
இத்தகைய சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பாஜகவுடனான கருத்து மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், விரைவில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மக்கள் வெறுக்கத்தக்க ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுகவின் சாதனைகளை பட்டி தொட்டியெங்கும் எடுத்து சொல்வது போன்றவை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் எரித்தது தொடர்பாக எங்கள் கண்டனத்தை தெரிவித்தோம். எதிர்காலத்தில் இதுதொடர்பான சம்பவங்கள் இருக்காது என நம்புகிறோம். கூட்டணி பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தொடர்கிறது என தெரிவித்தார்.