சுஷாந்த் சிங் ராஜ்புத் என்கிற விலைமதிப்பில்லாத நடிகரை நாம் நெப்போட்டிசத்திற்கு பலிகொடுத்துவிட்டோம் என நடிகர் நவாசுதீன் சித்திக் கவலை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் தனது திறமையால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு சிறந்த நடிகர் என்கிற அடையாளத்தைப் பெற்றவர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பாலிவுட்டில் நெப்போடிஸம் குறித்தும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் நவாசுதின் சித்திக்.
”நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். எனக்கு கிடைத்த வாய்ப்பு இன்னொருவருக்கு கிடைக்குமா என்றால் சந்தேகம் . நான் வாழ்நாள் முழுக்க துணை நடிகனாக மட்டுமே நடிக்கும் சாத்தியங்களோடுதான் என் கரியர் தொடங்கியது. நான் பாடிபில்டர் கிடையாது, நான் அழகான தோற்றம் கொண்டவன் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
எனது நடிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பாலிவுட்டில் நான் பிழைத்து வருகிறேன். ஒரு படத்தில் நான் இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒன்றை புதிதாக அதில் நிகழ்த்தியியிருப்பேன் என ரசிகர்கள் நம்பும் அளவிற்கு எனது கரியரை வளர்த்துள்ளேன். பணத்துக்காக எல்லா படங்களிலும் நான் நடிக்கத் தொடங்கினால் ரசிகர்கள் என்னை வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் நான் செலக்டிவான கதைகளில் நடிக்கிறேன்.
பாலிவுட்டில் நெப்போடிசத்தால் நான் எந்த பாதிப்புகளையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் அப்படி ஒன்று இல்லையென்று சொல்ல மாட்டேன். சுஷாந்த் சிங் ராஜ்புத் எனும் விலைமதிப்பில்லாத நடிகரை நாம் நெப்போடிசத்திற்கு பலிகொடுத்துவிட்டோம். எத்தனையோ திறமையான நடிகர்கள் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வேளை அவர்கள் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்திருக்கும். ஆனால் ஒன்று நிச்சயம், யாருடைய திறமையும் யாராலும் ஒளித்துவைக்க முடியாது. போராடினால் நிச்சயம் ஒருநாள் ஜெயிக்க முடியும்.
வேறு சில வகைகளில் நானும் நிறைய அவமானங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். உணவு வேளைகளில் ஒதுக்கிவைக்கப் பட்டிருக்கிறேன். ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே பெரிய நடிகர்களையும் யுனிட்டை சேர்ந்தவர்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வைக்கிறது. இங்கு எல்லோரும் சமம் என உணர வைத்தால் போதுமானது.” எனப் பேசியுள்ளார்.