பாலிவுட் சினிமாவில் மிகவும் திறமையான நடிகராக முக்கியமான வில்லன்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். தி லஞ்ச்பாக்ஸ், கேங்க்ஸ் ஆஃப் வஸ்ஸேபூர், கஹானி மற்றும் சேக்ரட் கேம்ஸ் போன்ற பல வெற்றி படங்களில் மாஸ் நடிகராக தனது திறமையை வெளிப்படுத்தினர். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நயவஞ்சகமான வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 


 



 


தனது திரைப்பயணத்தில் ஒரு வெற்றியாளராக இருப்பினும் அடிப்படையில் அவரின் தோற்றம் காரணமாக பல பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளார். பாலிவுட் திரையுலகில் தோற்றம் ரீதியாக தன்னை அசிங்கமான நடிகராக கருதுவதாக சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். "சிலர் ஏன் நம் தோற்றத்தை வெறுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நாம் அவ்வளவு அசிங்கமாக இருப்பதால் இருக்கலாம். கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது நான் அதை உணர்கிறேன். நான் ஏன் திரைத்துறைக்கு இப்படி ஒரு மோசமான தோற்றம் இருந்தும் வந்தேன் என்று கேட்டுக்கொள்வேன்" என தெரிவித்து இருந்தார். 


மேலும் அவர் பேசுகையில் "தோற்றம் ரீதியாக நான் திரைத்துறைக்கு ஒரு மோசமான நடிகர். இவ்வளவு நாளாக இதை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதை நான் நம்ப ஆரம்பித்துவிட்டேன். திரைத்துறை மீது எனக்கு எந்த ஒரு புகாரும் கிடையாது. என்னுடைய இந்த திரை வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்".


 



 


கடைசியாக நவாசுதீன் சித்திக், ஜீ5ல் ஒளிபரப்பான இணைய தொடரான  'ஹடி' மற்றும்  'ரவுது கா ராஸ்' திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஜூன் 28ம் தேதி வெளியான இந்த திரில்லர் திரைப்படத்தை ஆனந்த் சுராபூர் இயக்கி இருந்தார். அதுல் திவாரி, ராஜேஷ் குமார் மற்றும் நாராயணி சாஸ்திரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 


நவாசுதீன் சித்திக் திருமண வாழ்க்கையை பொறுத்தவரையில் அவர் ஆலியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவாகரத்து கோரி வழக்கு தொடுத்து இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் இணைந்து விட்டனர்.