அறிமுக இயக்குநர் கிரண் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நவயுக கண்ணகி’. பெங்களூருவை சேர்ந்த இவர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். கோமதி துரைராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பல நாடக கலைஞர்களும், புதுமுகங்களும் அறிமுகமாகியுள்ளனர். பவித்ரா தென்பாண்டியன், விமல் குமார், டென்சல் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 24ம் தேதியான இன்று ஓடிடி தளத்தில் வெளியானது. படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 


 



இந்த சந்திப்பில் 'நவயுக கண்ணகி' படத்தின் இயக்குநர் கிரண் துரைராஜ் பேசுகையில் "நான் பெங்களூருவை சேர்ந்த தமிழன். அங்கேயும் ஏராளமான தமிழர்கள் இருந்தாலும் அவரவர்களுக்கு என ஒரு ஜாதி அமைப்பு ஒன்று இருக்கும். அந்த வகையில் நானும் ஒரு ஜாதியை சேர்ந்தவன் தான் என்றாலும் அங்கு இருக்கும் வரை அதை பற்றி பெரிய அளவில் எனக்கு எதுவும் தெரியாது. அங்கிருந்து சென்னை வந்த பிறகு தான் என்னுடைய முந்தைய தலைமுறையினரால் இதுபோன்ற விஷயங்களை பற்றி கேட்டறிந்தேன்" என்றார். 



இயக்குநர் பா. ரஞ்சித் தனது சமூகத்தை சேர்ந்தவர்களை தான் நான் அதிக அளவில் என்னுடன் சேர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு மற்றவர்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை. அவர் ஜாதி பார்க்கும் போது மற்றவர்கள் ஏன் ஜாதி பார்க்க கூடாது என கேள்வி எழுகிறது. இது குறித்து உங்களின் கருத்து என்ன என இயக்குநர் கிரண் துரைராஜிடம் கேட்கப்பட்டது.


அதற்கு அவர் பதில் அளிக்கையில் "சினிமாவை நான் வெறும் கலையாக தான் பார்க்கிறேன். பா. ரஞ்சித் அண்ணாவுடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் . அவருடைய 'சார்பட்டா பரம்பரை’ படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் அப்படி பார்க்கிறார் என்பதற்காக நான் அவரை வெறுக்கமாட்டேன். அது போல நான் செய்யமாட்டேன் என்றாலும் அவரோட படத்தை நான் பின்பற்றுவேன். பலருக்கும் பாஸிட்டிவா, மோட்டிவேட் பண்ணற மாதிரி அவர் எடுக்குற அந்த விஷயத்தை நான் கத்துக்குறேன்.


 



அவர் சில இடத்தில நாத்தீகம் பேசுவார். நான் அது பார்க்க மாட்டேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. சில விஷயங்கள் தப்பு என நினைக்கிறேன். அதை மாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன் ஆனால் அதை மாற்ற முடியாது இருந்தாலும் முயற்சி செய்வேன். 


படத்தில் மாப்பிள்ளை கேரக்டர் தான் என்னுடைய கேரக்டர். படத்தில் அந்த பொண்ணு மாப்பிள்ளை மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்துவது போல இருக்கும். அந்த ஜாதியில் பிறந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக தான் அவன் வெறுக்கப்படுவான். அவன் மீது எந்த ஒரு தப்பும் இல்லை. அதே போல தான் நானும். உதாரணத்திற்கு சினிமாவில் இரண்டு தரப்பு உள்ளது எதிரில் இருப்பவர்களுக்கு ஆதரவாக படத்தை எடுக்கிறார்கள். அப்படி இல்லாமல் எங்கள் பக்கத்தில் இது எல்லாம் தப்பாக நடக்கிறது என சொல்லிவிட்டாலே பிரச்சினை முடிந்தது. அப்படி தான் என்னுடைய தரப்பை சித்தரித்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதற்காக இப்படத்தை எடுத்தேன் என பேசியிருந்தார் இயக்குநர் கிரண் துரைராஜ்.