நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - சாவித்திரி நடிப்பில் 1964ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி இப்படம் வெளியானது. இன்றுடன் 58 ஆண்டுகளை கடந்த பின்னும் நம் நினைவுகளில் இருந்து நீங்காத ஒரு மாபெரும் சாதனை படத்தை காவியம். சிவாஜி கணேசன் திரைவாழ்வில் ஒரு மைல்கல் : தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பலருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தவர். 1952ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை 'பராசக்தி' திரைப்படம் மூலம் தொடங்கியவர். ஒவ்வொரு நடிகருக்கும் தங்களின் முதல் படம் எத்தனை முக்கியமோ அதே போல தான் அவர்களது திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைவது 25, 50, 75 மற்றும் 100 வது திரைப்படம். அப்படி நடிகர் திலகத்தின் திரை வாழ்வில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய திரைப்படம்தான் "நவராத்திரி".
ஒன்பது கதாபாத்திரத்தில் சிவாஜி : இப்படத்தில் நடிகர் திலகம் ஒன்பது கதாபாத்திரங்களில் தோன்றினார். டிஜிட்டல் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் என்ன என்பது பற்றி தெரியாத காலத்திலேயே இது சாத்தியமாகியுள்ளது என்றால் அது ஆச்சரியம் தானே. வீட்டை விட்டு ஒரு பெண் வெளியேறிய பின்னர் ஒன்பது நாட்கள் ஒன்பது விதமான மனிதர்களை சந்திப்பது தான் 'நவராத்திரி' படத்தின் மையக் கதை. இப்படத்தை முழுக்க முழுக்க ஒரு பாசிட்டிவ் கண்ணோட்டத்தில் இயக்கியிருந்தார் இயக்குனர் என்பது படத்தின் சிறப்பு. கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுத கே.வி.மகாதேவன் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆஹா ஓஹோ பிரமாதம் தான். குறிப்பாக ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ பாடல் படத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் கதாபாத்திரத்தையும் அவரின் மனநிலையையும் அப்படியே பிரதிபலித்த ஒரு பாடல். 100 வது படம் 100 வது ஆண்டும் கொண்டாடப்படும் : 58 வது ஆண்டு மட்டும் அல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும். நடிகர் திலகம் நடிப்பில் எத்தனையோ சிறப்பாக படங்கள் வெளியாகி இருந்தாலும் அவரின் 100வது திரைப்படம் என்றும் ஒரு ஸ்பெஷல் திரைப்படம் தான்.