தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ என்ற பெயர் எடுப்பது அதிலும் அனைவரின் ஃபேவரட் ஹீரோ என்ற பெயரெடுப்பது என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. வாரிசு நடிகராக இருந்து விட்டால் ஒரு இரண்டு படத்தில் நடித்துவிட்டாலே இவர் இப்படி தான் என முத்திரை குத்திவிடுவார்கள். அப்படி பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் என அடையாளத்தோடு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் கார்த்திக். பின்னர் தமிழ் சினிமாவே நவரச நாயகன் என கொண்டாடிய கார்த்திக்கின் 63வது பிறந்தநாள் இன்று.
நான் சினிமாவுக்கு வந்தது ஒரு ஆக்சிடென்ட் என பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் உண்மையிலேயே ஆக்சிடென்ட்டாக பாரதிராஜா கண்ணில் பட்டு முரளி என்ற இயற்பெயரே மறந்து போகும் அளவுக்கு கார்த்திக் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார்.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் விச்சு கதாபாத்திரத்தில் அமுல் பேபியாக அலையாக தொடங்கிய கார்த்திக்கின் பயணம் பல பரிணாமங்களை எடுத்தது. கார்த்திக்கு மட்டும் முதல் படம் அல்ல 80ஸ் களில் கொடி கட்டி பறந்த நடிகை ராதாவுக்கும் அது தான் அறிமுக படம். தமிழ் சினிமாவில் ஆன் ஸ்க்ரீன் ஜோடிகளாக கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி, கமல் - ஸ்ரீ தேவி போன்ற பல எவர்கிரீன் ஜோடிகளின் பட்டியலில் இணைந்தனர் கார்த்திக் - ராதா ஜோடி. இருப்பினும் கார்த்திக்குடன் டூயட் பாடிய குஷ்பூ, அம்பிகா, ரேவதி, ஜீஜீ, நக்மா, நிரோஷா என அனைவருடனும் கச்சிதமான பேராக விளங்கியவர் கார்த்திக்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பொருந்தி நடிக்க கூடிய கார்த்திக் அமுல் பேபி என்ற அடையாளம் மறைந்து சாக்லேட் பாய், ஆக்ஷன் ஹீரோ என அழைக்கப்பட்ட கார்த்திக் பின்னர் நவரச நாயகன் என்றே கொண்டாடப்பட்டார். ஊமை விழிகள், கோபுர வாசலிலே, நினைவெல்லாம் நித்யா, வருஷம் 16 , அக்னி நட்சத்திரம், இதயத்தாமரை, அமரன், கோகுலத்தில் சீதை, பொன்னுமணி, நாடோடி பாட்டுக்காரன், மேட்டுக்குடி, பிஸ்தா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், அரிச்சந்திரன், உள்ளத்தை அள்ளித்தா, சந்தித்த வேளை இப்படி அவரின் நடிப்பில் ஹிட் அடித்த படங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
கார்த்திக் நடித்த ஒவ்வொரு படத்திலும் தனது அடையாளத்தை கதாபாத்திரத்தோடு ஒன்றிணைந்து கார்த்திக் தவிர வேறு யாராலும் இந்த கேரக்டரை இந்த அளவுக்கு பர்ஃபெக்ட்டா செய்ய முடியாது என சொல்லும் அளவிற்கு பெயர் எடுத்தவர்.
துறுதுறு சிட்டி பாய், கிராமத்து இளைஞன், அப்பாவி, சீரியஸ் கேரக்டர், காமெடி ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடை, உடை, பாவனை, தோரணை என அனைத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தக்கூடிய அசாத்திய திறமை கொண்டவர் நடிகர் கார்த்திக். 80ஸ்களில் தொடங்கிய கார்த்திக் பயணத்தில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி விழா கண்ட படங்களாக அமைந்தன. ஏராளமான பெண் ரசிகர்களை கவர்ந்த இந்த நவரச நாயகனை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனலும் மறக்கவே முடியாது.