தில், கில்லி, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த மே மாதம் தனது 60வது வயதில் அசாமை சேர்ந்த ருபாலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தது விவாதத்தை கிளப்பியது. அவரின் திருமணம் குறித்து பல விமர்சனங்களும், பாராட்டுக்களும் சர்ச்சைகளும் எழுந்தன.
ஆஷிஷ் வித்யார்த்தியின் முன்னாள் மனைவியும் நடிகையுமான பிலூ வித்யார்த்தி (ரஜோஷி பருவா) தனது முன்னாள் கணவர் ஆஷிஷ் வித்யார்த்தி குறித்தும் அவரின் இரண்டாவது திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகியுள்ள நுஷ்ரத் பருச்சாவின் அகெல்லி திரைப்படத்தில் பிலூ நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆஷிஷ் உடனான திருமணம் மிகவும் சந்தோஷமானது. நாங்கள் வாழ்ந்த காலம் வரையில் நல்ல ஒரு திருமணம் வாழ்க்கையை வாழ்ந்தோம். நீ இதை செய் அதை செய் என அவர் ஒருபோதும் என்னை வற்புறுத்தியது கிடையாது. ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்தேன் எனலாம். மகனை கவனித்து கொள்வதற்காக ரேடியோவில் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழு நேர அம்மாவானேன். அவனுக்கு 14 வயது ஆனபிறகுதான் டிவியில் நடிக்க துவங்கினேன். 2018ம் ஆண்டுக்கு மேற்பட்டு படங்களில் நடிக்க துவங்கினேன்.
நான் நடிப்பதில் ஆஷிஷ் பெரியளவில் ஆர்வம் காட்டியதில்லை, இருவரும் ஒன்றாக இணைந்து நடித்ததும் இல்லை. இருப்பினும் ஊக்குவிப்பவராகவும் ஆதரவாகவும் இருந்தார். என்னுடைய தேவைகளும் அவரின் எதிர்கால தேவைகளும் வெவ்வேறாக இருந்ததுதான் எங்களின் பிரிவுக்கு காரணமாக அமைந்தது.
2021ம் ஆண்டு விவகாரத்து பெற்றோம் ஆனால் அதை வெளி உலகிற்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை. எங்களின் பிரிவை எந்த ஒரு மனக்கசப்பும், சண்டைகளும் இல்லாமல் அழகாக எளிமையாக மாற்றினார் ஆஷிஷ். எங்களின் பிரிவு குறித்து பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ப்பட்டன. நான் அவரை பாதுக்கப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அவை எதுவும் என்னை பாதிக்கவில்லை என்பது தான் உண்மை. நான் மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருக்கிறேன் என்ற உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும்" என்றார்.
ஆஷிஷும், பிலூவும் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இருவரும் அவர்களின் மகனுக்கு நல்ல ஒரு பெற்றோர்களாக இருந்து வருகிறார்கள். அகெல்லியில் பிலூவின் நடிப்பை உற்சாகப்படுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் படத்தில் போஸ்ட்டரை பகிர்ந்து "பிலூ, நுஷ்ரத் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். டிரெய்லர் அடித்து நொறுக்குகிறது" என பதிவிட்டு இருந்தார் ஆஷிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.