தேசிய விருது வென்ற கடைசி விவசாயி, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களுக்கு வாழ்த்துகளையும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு விருது கொடுத்ததற்கு கண்டனத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.


பாராட்டும் விமர்சனமும்


69ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்ற நிலையில் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தியத் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


தமிழில் கடைசி விவசாயி, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களுக்கும், ஆவணப் படமான கருவறைக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மேலும், 2021ஆம் ஆண்டு வெளியான சர்ச்சைக்குரிய படமான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு விருது வழங்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


முதலமைச்சர் ட்வீட்


"69ஆவது தேசிய விருதுகளில் தமிழில் சிறந்த  படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!


மேலும், இரவின் நிழல் படத்தில் ‘மாயவா தூயவா’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 


இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” என ட்வீட் செய்துள்ளார்.


 






சர்ச்சைக்குரிய படமாக விமர்சிக்கப்பட்டு வரும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு விருது வழங்கப்பட்டது நெட்டிசன்கள் மத்தியிலும் எதிர்ப்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


தி காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை


 விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரவர்த்தி, விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் பலர் நடித்த படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. சென்ற ஆண்டு மார்ச் 11ஆம் தேதி இப்படம் வெளியானது. 


காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980களின் பிற்பகுதியில் தொடங்கி காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறியதை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக படம் வெளியானது முதலே விமர்சனங்கள் எழுந்தன.


ஒருபுறம் பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மறுபுறம்  அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பலர் மத்தியிலும் இப்படம் கடும் விமர்சனங்களை பெறத் தொடங்கியது.


இதன் உச்சக்கட்டமாக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது,  திரைப்பட விழாவின் நடுவரும் இஸ்ரேல் இயக்குநருமான நடவ் லாபிட், பிரச்சார நோக்குடன் 'தி காஷ்மீர் பைல்ஸ்' எடுக்கப்பட்டுள்ளதாகவும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு கீழ்த்தரமான படம் என்றும் கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.