இயக்குநர் சுகுமாறன் இயக்கிய புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். புஷ்பா படத்தில் முன்னதாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் ஒருவர் நடிக்க இருந்து கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்தப் படத்தில் இருந்தும் விலகினார் என்பது உங்களுக்குத் தெரியுமா. யார் அந்த நடிகர்..?
புஷ்பா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜூன் நடித்த திரைப்படம் புஷ்பா. 2021-ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. ராஜமவுலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட் ஆன தெலுங்கு படம் என்ற சாதனையையும் புஷ்பா படைத்தது. இதில் அல்லு அர்ஜூனுடன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா தி ரூல் இணையத்தில் டிரெண்டாகியது. புஷ்பா ஸ்டைலும், அல்லு அர்ஜூன் நடனத்தையும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரீல்சாக வெளியிட்டு வந்தனர்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருது புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கும் முதல் தெலுங்கு நடிகருக்கான பெருமைக்குரியவர் அல்லு அர்ஜுன். இதனால் படக்குழுவினர் மற்றும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளார்கள். அதே நேரத்தில் மற்றொரு தெலுங்கு சூப்பர்ஸ்டாரின் நடிகர் ஒருவரின் ரசிகர்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமால் போய்விட்டதே என்கிற ஆதங்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகர்கள்தான்.
வாய்ப்பைத் தவறவிட்ட மகேஷ் பாபு
புஷ்பா படத்தில் நடிக்க முன்னதாக மகேஷ் பாபுவே தேர்வாகியிருந்தார். ஒரு சில கருத்து வேறுபாடு காரணங்களால் இந்தப் படத்தில் இருந்து விலகினார் மகேஷ் பாபு. இந்தத் தகவலை தனது ட்விட்டர் தளத்திலும் அவர் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த ட்வீட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு சின்ன கருத்து வேறுபாட்டால் தெலுங்கு சினிமாவின் முதல் தேசிய விருது வென்ற நடிகர் என்கிற பெருமையை தவறவிட்டுவிட்டாரா மகேஷ் பாபு? என்று அவரது ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றார்கள்.