தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்ஷன் படத்தில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், பா.ரஞ்சித் அட்டகத்தி பாணியில் அழகிய காதல் கதையை இயக்குவதாக அறிவித்தார். இதன்படி, நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற காதல் படத்தை தற்போது சத்தமே இல்லாமல் இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை படத்தின் போஸ்டர் வெளியானது. படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு பெண் தலைவிரிகோலமாய் இருப்பதும், அதில் கதாபாத்திரங்கள் இருப்பதுபோன்றும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளராக தென்மா பணியாற்றியுள்ளார். ரஞ்சித்தின் இசை கூட்டணியான சந்தோஷ் நாராயணனை இப்படத்தில் பணியாற்றவில்லை என்பது ரசிகர்களிடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.
முன்னதாக பர்ஸ்ட் லுக்குக்கான அப்டேட்டுக்கே ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ரஞ்சித். கருமை, நீலம் கலந்த வண்ணங்களால் ஆன புகைப்படத்தை பகிர்ந்த ரஞ்சித் “காதல் ஒரு அரசியல்” என்று பதிவிட்டிருந்தார். அந்த போஸ்டர் உருவான வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார்.
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா படத்திற்கு முன்பு பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றையே படமாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. சார்பட்டா படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பிற்கு பிறகு மீண்டும் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக காதல் படத்தை எடுத்துள்ளார்.