தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எத்தனை ஆண்டுகளானாலும் ஆழமாக பதிந்த சீரியல்களின் வரிசையில் நிச்சயம் இடம்பெற்று இருக்கும் ஒரு தொடர் 'மெட்டி ஒலி'. அந்த அளவுக்கு அந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தொடரை இயக்கியதோடு அதில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திருமுருகன். சின்னத்திரையில் தனது முத்திரையை ஆழமாக பதித்த திருமுருகன் வெள்ளித்திரையில் 'எம் மகன்' திரைப்படம் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார்.
பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்த 'எம் மகன்' படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மிகவும் கண்டிப்பான அப்பாவாக நாசரும் அப்பாவுக்கு பயந்து நடுங்கும் மகனாக இருந்தாலும் அவர் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் அன்பும் கொண்ட மகனாக நடிகர் பரத் நடித்திருந்தார்.
தந்தை - மகன் இடையே இருக்கும் உறவை அன்றாடம் அனைத்து குடும்பங்களில் காணப்படும் சூழலை மிகவும் யதார்த்தமான வெளிப்படுத்தியது 'எம் மகன்' திரைப்படம். இப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் மிக சிறப்பாக அந்த கேரக்டர்களாக வாழ்ந்து இருந்தனர். அதுவே படத்தின் வெற்றி உறுதி செய்தது.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நாசர் 'எம் மகன்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.
"எத்தனையோ படங்களில் நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என சொல்லி பலரும் எனக்கு போன் செய்து பாராட்டுவார்கள். ஆனால் 'எம் மகன்' படத்தை பார்த்துவிட்டு ஒரு நூறு பேர் போன் பண்ணி இருந்தாங்க என்றால் அதில் தொண்ணூறு பேர் என்னோட நடிப்பை பற்றியே பேசவில்லை. அதில் ஒன்று இரண்டு பேர் அழுது கூட பேசி இருந்தார்கள். என்னோட அப்பாவை ஞாபகப்படுத்திட்டீங்க சார், எங்க அப்பாவ ஞாபகப்படுத்திட்டீங்க சார், எங்க அப்பாவ அப்படியே பாக்குற மாதிரி இருந்துது சார், உங்கள நான் என்னோட அப்பாவா பாக்குறேன் சார் அப்படின்னு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பேசி இருந்தாங்க.
நடிப்பு இல்லாம இது வேற மாதிரியான ஒரு பாராட்டு. இதில் பெரும்பாலான பாராட்டுக்கள் அனைத்தும் திருமுருகனை தான் சேர வேண்டும். நான் நன்றாக நடித்திருந்தேன் அதனால் தான் இந்த பாராட்டு கிடைத்தது என்பதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். திருமுருகன் அந்த அளவுக்கு ஆழமாக அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதால் தான் அது அப்படியே பார்வையாளர்களின் மனதில் போய் பதிக்கிறது. அதுக்கு நான் கிரெடிட் எதுக்கு கொள்ள மாட்டேன். பல எமோஷனல் கேரக்டரில் நான் நடித்து இருந்தாலும் அன்னியோன்யமான ஒரு குடும்பத்தில் என்னை ஒருத்தனாக்கிய ஒரு படமாக தான் நான் இப்படத்தை பார்க்கிறேன்" என உணர்ச்சி ததும்ப பேசி இருந்தார் நடிகர் நாசர்.