சர்வதேச கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியான மார்ட்டின் ஸ்கார்சீஸ் இயக்கிய killers of the flower moon திரைப்படம் 10 நிமிடம் இடைவிடாமல் கைதட்டல்களை பெற்றது.


ஹாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மார்ட்டின் ஸ்கார்சீஸ்.ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் இயக்குனர்கள் மார்ட்டினை தங்களது குருவாக கருதி வருகிறார்கள்.தமிழில் இன்று பல திரைப்படங்கள் மார்ட்டின் ஸ்கார்சீஸின் ஒரு காட்சியையாவது நினைவுபடுத்தாமல் இருக்காது. ஹாலிவுட்டில் கிட்டதட்ட 25  திரைப்படங்கள், 16 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் மார்ட்டின்.தற்போது killers of the flower moon என்கிற படத்தை இயக்கியுள்ளார்.


 பிரான்சில் நடந்துவரும் சர்வதேச கான் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. மார்டினின் ஆதர்ஷ நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ,  ராபர்ட் டி நிரோ, ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். ஓசாஜே என்கிற அமெரிக்கப் பழங்குடி மக்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டப் படம்.இந்தப் படத்தினை பார்த்த பார்வையாளர்கள் படத்தை பாராட்டும் விதத்தில் சுமார் 10 நிமிடம் விடாமல் கைதட்டி மார்டின் ஸ்கார்சிஸைப் பெருமைப்படுத்தி உள்ளார்கள்.


கடைசியாக மார்ட்டின் 1985 ஆம் ஆண்டு இயக்கிய after hours திரைப்படத்திற்காக கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் இதற்குப்பின் கிட்டதட்ட 37 ஆண்டுகள் கழித்து கான் திரைப்பட விழாவில் தனது படத்தை திரையிட்டுள்ளார் மார்டின் ஸ்கார்சிஸ். திரைப்பட ஆர்வலர்கள், திரைப் பிரபலங்கள், இயக்குனர்கள் என அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வரிசையில் நின்றனர். பல  மாணவர்கள் இந்த மாதிரியான ஒரு நிகழ்வில் மார்ட்டினின் படத்தை பார்த்து உற்சாகமடைந்தனர். 


திரையிடலைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் மார்டினிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக சுவாராஸ்யமான பதில்களை அளித்திருக்கிறார். மேலும் திரைப்படங்கள் எடுப்பது குறித்து பேசியபோது,  “இந்த வயதில் நான் நிறைய விஷயங்களை செய்வதற்கு ஆசைப்படுகிறேன்.என்னால் செளகரியமாக ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே இருக்க முடியாது. ஆனால் என்னுடைய 80 வயது மிக சில  வேலைகளை செய்யவே என்னை அனுமதிக்கிறது” என கூறினார்.


அதிகமான முறை ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் மார்டினும் ஒருவர்.கிட்டதட்ட 10 முறை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகி உள்ளார் .இதில் 2007 ஆம் ஆண்டு தி டிபார்டட் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.டாக்ஸி டிரைவர்,ஷட்டர் ஐலண்ட்,  வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட், ரேஜிங் புல், போஸ்ட், என இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் இயக்குநராக விரும்புபவர்கள் பாடமாக எடுத்துக்கொள்ளும் படைப்புகள்.